நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் வடகிழக்குப் பருவ மழையினையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தலைமையில் நேற்று ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக மழைநீர் வடிகால்களின்  வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் உள்ள அடைப்புகளை சீர்செய்யும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், சாலைகளில் உள்ள சிறு பள்ளங்களைச் சீர்செய்யவும், பருவமழையின் காரணமாக முடிக்கப்படாமல் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டிகளை விரைந்து அமைக்கவும், கடந்த வார மழையில் மழைநீர்  தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைக்கவும், நீர்வழிக்கால்வாய்களில் நீர்மட்டம் உயரும்போது மழைநீர் உள்புக வாய்ப்புள்ள வடிகால்களில் சிறிய மதகுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் பம்புகளை சரிபார்த்து தயார்நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக சாலை மற்றும் தெருக்களிலிருந்து அடித்து வரப்பட்ட திடக்கழிவுகள் தேங்கியிருந்தால், அவற்றை உடனடியாக அகற்றவும் உத்தரவிடப்பட்டது. நீர்நிலைகளின் அருகாமையில் பிளாஸ்டிக் மற்றும் இதர திடக்கழிவுகளை கொட்டும் நபர்களின் மீது உடனடியாக காவல்துறையில் புகார் அளித்து திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். பொதுமக்களும் நீர்நிலைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகாமையில் திடக்கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்த்து, தங்கள் இல்லங்களிலேயே மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்.  

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சியின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 879 இடங்களில் மோட்டார் பம்புகள் தயார்நிலையில் இருப்பதாகவும், போக்குவரத்திற்கு இடையூறாகவும், ஆபத்தான மற்றும் விழும் நிலையில் உள்ள 1,018 மரங்களின் கிளைகள் 01.11.2022 முதல் 08.11.2022 வரை அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த வார மழையின்போது, மழைநீர் தேங்கிய தேனாம்பேட்டை மண்டலம்-ஜி.பி.சாலை, இராயபுரம் மண்டலம்-பிரகாசம் சாலை போன்ற சாலைகளில் மழைநீர் வெளியேறி கால்வாய்களில் கலக்கும் இடங்களில் உள்ள அடைப்புகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் பெய்த மழைக்கு பின்னர் 04.11.2022 முதல் 09.11.2022 வரை மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள 344 நீர்நிலைகளிலிருந்து 119 மெட்ரிக் டன் கழிவுகள் தீவிரத் தூய்மைப் பணியின் மூலம் அகற்றப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.1,35,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில் பிளாஸ்டிக் போன்ற திடக்கழிவுகளை அடையாற்றில் கரையில் கொட்டிய நபர் மாநகராட்சி அலுவலர்களால் கண்டறியப்பட்டு திடக்கழிவுகளை கொண்டு வர பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொடர்புடைய நபரின் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் 01.11.2022 முதல் 09.11.2022 வரை 1,968 எண்ணிக்கையிலான விடுபட்ட வண்டல் வடிகட்டித் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 20,089 எண்ணிக்கையிலான வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மழையின் காரணமாக ஏற்பட்ட அடைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளன. வருகின்ற 11.11.2022 அன்று சென்னையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் தங்களுக்கான பகுதிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார்நிலையில் இருந்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து பருவமழை அடுத்தடுத்த நாட்களில் தொடர உள்ள நிலையில் மழைநீர் வெளியேற மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்வழித்தடங்களில் உள்ள வண்டல்கள் மற்றும் கழிவுகள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் நீர்நிலைகளிலோ அல்லது நீர்நிலைகளின் அருகாமையிலோ திடக்கழிவுகளைக் கொட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: