×

பெரியாறு நீர்மட்டம் 136 அடியை தாண்டியது: பொதுப்பணித்துறை முதல் கட்ட எச்சரிக்கை

கூடலூர்: பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தாண்டி உள்ளது. மேலும், இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு, தமிழக பொதுப்பணித்துறை சார்பில் முதல்கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ள து. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,544 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 2,274 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் 136 அடியை கடந்துள்ளது. இதையடுத்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு, தமிழக பொதுப்பணித்துறை சார்பில் முதல்கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 136.25 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,274 கனஅடி. அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 524 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  அணையின் இருப்புநீர் 6,181 மில்லியன் கன அடியாக உள்ளது. அடுத்து வரும் நாட்களில் அதிகமழை பெய்து நீர்வரத்து அதிகரித்தாலும், பெரியாறு அணையில் ரூல்கர்வ் விதிப்படியே தண்ணீரை நிலைநிறுத்த முடியும்.

ரூல்கர்வ் விதிப்படி பெரியாறு அணையில் நவ. 10 (இன்று) வரை 139.50 அடி தண்ணீர் மட்டுமே நிலைநிறுத்த முடியும். அதற்கு மேல் வரும் தண்ணீரை தமிழகப்பகுதிக்கு கூடுதலாக எடுக்கவோ அல்லது உபரிநீராக மதகுகளை திறந்து கேரளப்பகுதி வழியாகவோ வெளியேற்ற வேண்டும். ரூல்கர்வ் விதிப்படி உபரிநீரை கேரளப்பகுதிக்கு திறப்பதை விட, தமிழகத்துக்கு கூடுதலாக எடுத்துச் செல்ல தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அடுத்ததாக அணை நீர்மட்டம் 138 அடியாகும்போது 2ம் கட்ட எச்சரிக்கையும், 140 அடியாகும்போது 3ம் கட்ட எச்சரிக்கை மற்றும் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். 141 அடியில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், நீர்மட்டம் 142 அடியாகும்போது 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும்.

எந்தெந்த தேதிகளில் எவ்வளவு நீர் தேக்கலாம்?
ரூல்கர்வ் விதிப்படி பெரியாறு அணையில் ஜூலை 10 முதல் ஜூலை 19 வரை 136.30 அடி தண்ணீரும், ஜூலை 21 முதல் 31 வரை 137 அடி தண்ணீரும், ஆக. 10 வரை 137.50 அடி தண்ணீரும், ஆக. 20 வரை 138.40 அடி தண்ணீரும், ஆக. 31 வரை 139.80 அடி தண்ணீரும், செப். 10 வரை 140.90 அடி தண்ணீரும், செப். 20 வரை 142 அடி தண்ணீரும் நிலைநிறுத்தலாம். பின் செப். 30ல் 140 அடி வரை குறைத்து, அக். 1 முதல் 31 வரை 138 அடியாகவும் பின் நவ. 1 முதல் 10 வரை 139.50 அடியாகவும், நவ. 10-20 வரை 141 அடியாகவும், நவ. 20-30 வரை படிப்படியாக அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம். பின் டிசம்பர் முதல் கோடைகாலமான மே 31 வரை 142 அடிவரை நிலை நிறுத்தலாம்.

Tags : Priyaru ,Public Works , Periyar Water Level, Public Works Department, First Phase Alert
× RELATED வால்பாறையில் பொதுப்பணித்துறை வளாகத்தில் புதர் காடுகளில் காட்டு தீ