×

திருத்தங்கல் மண்டலத்தில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: பருவமழை தொடங்கியதால் மாநகராட்சி விறுவிறு...

சிவகாசி: சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் மழைக்கால நோய் தாக்குதலை தடுக்கும் விதமாக திருத்தங்கல் மண்டலத்தில் அபேட் மருந்து தெளிப்பு உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக திருத்தங்க்ல் மண்டலத்தில் உள்ள 24 வார்டுகளிலும் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை துவக்கியுள்ளது. ஆண்டுதோறும் அக். துவங்கி ஜன. இறுதி வரை வடகிழக்கு பருவமழை இருக்கும்.

இந்த ஆண்டு தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. பருவ நிலை மாற்றம் காரணமாக சிவகாசி பகுதியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு, மெட்ராஸ் ஐ (கண்வலி) போன்றவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிகமான மக்கள் கண்வலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிவகாசி, திருத்தங்கல் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளிலும் கண்வலி மற்றும் காய்ச்சலுக்கு பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

திருத்தங்கல் மண்டல சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, திருத்தங்கல் மண்டலத்தில் சுமார் 70 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக 24 வார்டுகளிலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை காலங்களில் டெங்கு, மலேரியா, டைபாய்டு, டயரியா, ஹெப்படைட்டிஸ் உள்ளிட்ட நோய்கள் அதிக அளவில் தாக்கும். இதை தடுக்க, குடிநீரை தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின்னர் பயன்படுத்த வேண்டும். குழாய்கள் உடைந்து நீர் வெளியேறும் இடங்களில், கழிவுநீர் கலப்பதால், குடிநீர் மூலம் நோய் தொற்று ஏற்படுகிறது. குடிநீரில் குளோரின் கலக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

கிணறு, மேல்நிலை மற்றும் கீழ்நிலைத் தொட்டிகள், வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள், கொசுப்புழு புகா வண்ணம் மூடி வைக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மாநகராட்சி சுகாதார நிலையத்திற்குச் சென்று மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற வேண்டும். டயர், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றும் பணியினை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பொது கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

வைரஸ் காய்ச்சல் பரவும் இடங்களை கண்டறிந்து மாநகராட்சி சார்பாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. தெருக்களில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு கொசு புழுக்கள் உருவாகாமல் இருக்க மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. அதே போல் வீடுகளுக்கு சென்று அங்கு டிரம், குடம், தண்ணீர் தொட்டிகள் போன்ற இடங்களில் கொசு புழுக்கள் உள்ளதா? என தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் அதில் அபேட் மருந்து தெளிக்கப்படுகிறது என்று கூறினார்.

Tags : Thirutangal , Tiruthangal Mandam, Rainy Season Disease Prevention, Monsoon
× RELATED சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை