பல்லாவரம் அருகே பரபரப்பு மின்கம்பி உரசியதில் பெயின்ட் லாரி தீப்பிடித்தது

பல்லாவரம்: பல்லாவரம் அருகே பெயின்ட் பொருட்களை ஏற்றி வந்த லாரி மின் கம்பி மீது உரசியதில் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாவரம் அருகே பம்மல், நாகல்கேணி பகுதியில் ஒரு தனியார் பெயின்ட் குடோன் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு நிறுவனங்களின் பெயின்ட் பொருட்களை மொத்தமாக சேமித்து, சென்னை நகரின் பல்வேறு கடைகளில் விற்பனைக்கு அனுப்பி வருவது வழக்கம். இந்த குடோனுக்கு பல்வேறு நிறுவனங்களின் பெயின்ட் மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. இந்த லாரியை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இர்பான் (35) ஓட்டி வந்தார். லாரியில் பல லட்சம் மதிப்பிலான சுமார் 18 டன் எடையிலான பெயின்ட், தின்னர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தன.

இந்நிலையில், நேற்று அதிகாலை பம்மல்-நாகல்கேணி அருகே கன்டெய்னர் லாரி வந்தபோது, அந்த பகுதியில் மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதில், டப்பாக்களில் சிதறி கிடந்த பெயின்ட்களின் மீது தீப்பிடித்து, லாரி முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. தகவலறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி, லாரியில் பெயின்ட் டப்பாக்களில் பரவியிருந்த தீயை அணைத்தனர். எனினும், லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பெயின்ட் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. புகாரின்பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: