×

சென்னையில் பெய்யும் கன மழையால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு: அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

சென்னை: சென்னையில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே, இந்த ஏரிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியதால், சுற்று வட்டாரத்தில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

 நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கிருஷ்ணா நதி நீர் நிறுத்தப்பட்ட நிலையில் புழல் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இதனால் சீரான குடிநீர் சென்னை மக்களுக்கு தொடர்ந்து கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடக்கம் முதல் தற்போது வரை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வேகமாக குறைந்து வந்த ஏரிகளின் நீர்மட்டம் தற்போது பெய்து வரும் மழையால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இந்த 2 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கும் நிலையை அடைந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  இந்த இரண்டு ஏரிகளில் இருந்தும் 100 கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.  புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,730 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. நேற்று முன்தினம் 84 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 141 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 21 அடியில் 18.60 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 292 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 2,668 மி.கன அடி தண்ணீர் உள்ளன. நேற்று 33 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 219 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 20.26 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியில் இருந்து 705 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Chennai ,Puzhal ,Sembarambakkam , Chennai, heavy rain, Puzhal, Sembarambakkam lake, increase in water flow, official alert, monitoring
× RELATED குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம்...