×

கால்வாய்களில் குப்பை கொட்டுவதால் மழைநீர் தேக்கம் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சித்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: கால்வாய்களில் குப்பை கொட்டுவதால் மழைநீர் தேங்குவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, குப்பை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை செயலளார் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் மழைநீர் வடிகால் பணிகள் சென்னை நகர் பகுதிகளில் 95 சதவீதம் நிறைவடைந்ததால் வேகமாக தண்ணீர் வடிந்தது. மேலும் மழைநீர் வடிகால் இல்லாத தாழ்வான பகுதிகள் மற்றும் பணிகள் முடிவடையாத பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேங்கியது. அந்த பகுதிகளில் மோட்டார் பம்ப்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததால் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் அசுர வேகத்தில் நடந்தது.
 
இதற்காக, சென்னை மாநகராட்சி சார்பில் 2000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு சில இடங்களில் குறிப்பாக வட சென்னை பகுதியில் மழைநீர் தேங்கியது. ஓட்டேரி நல்லா கால்வாயில் முறையாக தண்ணீர் செல்லாத காரணத்தால் தான் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதை தொடர்ந்து, இந்த கால்வாயை தொடர்ந்து தூர்வார சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.  இதுதொடர்பான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் போது ஓட்டேரி நல்லா கால்வாயில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் தண்ணீர் செல்வது தடைபடுவது தெரியவந்தது.

 இந்நிலையில், பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஓட்டேரி நல்லா கால்வாயில் குப்பை கொட்டப்படுவது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா மாநகராட்சி திடக் கழிவு மேலாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மாநகராட்சி அதிகாரிகள், “கால்வாய்களில் குப்பை கொட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர். இதைக் கேட்ட நகராட்சி துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, ‘‘கால்வாய்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களான சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனர் சித்திக், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், ஆணையர் சங்கர்லால் குமாவத், துணை ஆணையர்கள் பிரசாந்த், விஷூ மகாஜன், சினேகா, ஷேக் அப்துல் ரகுமான், சிவகுரு பிரபாகரன், அமீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Municipal Secretary , Canal, Garbage, Rainwater Detention, Vehicle, Seizure, Strict Action, Inspection, Municipal Secretary, Order
× RELATED முதல்-அமைச்சர் பிறந்தநாளை மக்களுக்கு...