வடகிழக்கு பருவ மழையால் புயல் வந்தாலும் எதிர்கொள்ள தயார்: மேயர் பிரியா பேட்டி

தண்டையார்பேட்டை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த வாரம் சென்னையில் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்த உத்தரவிட்டார். அதன்படி கொளத்தூரில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோல், துறைமுகம் தொகுதி ஜக்கா புரம், அண்ணா பிள்ளை தெரு, பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. இந்த முகாம்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் நேற்று காலை ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.  மேலும், சிகிச்சை பெற வந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். முகாமில், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மருந்து, மாத்திரைகள் வாங்கிச்சென்றனர்.

இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி 5வது மண்டல குழு தலைவர் ராமுலு, பகுதி திமுக செயலாளர் முரளி, கவுன்சிலர் ராஜேஷ் ஜெயின், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், வட்ட செயலாளர்கள் கதிரவன், ராமமூர்த்தி மற்றும் திமுகவினர், சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர், மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சென்னையில் கடந்த 5ம்தேதி 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடந்தது. தொடர்ந்து இன்று 4 பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். 2வது முறையாக மழைநீர் வடிகால்களை தூர்வாரி உள்ளோம்.

அதேபோல, புயல் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். பழைய மரங்களை அகற்ற மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சி சமூகநீதிக்கு முழுவதுமாக குரல் கொடுக்கின்ற ஆட்சி. உச்ச நீதிமன்றத்தில் சமூகநீதி மறுக்கப்படுவதால் அதையும் எதிர்த்து சீராய்வு மனு செய்ய அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் கூட்டுகின்ற அரசு. திராவிட மாடல் ஆட்சி என்பது சமூகநீதியை நிலை நாட்டுகின்ற ஆட்சி. இது அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: