×

குஜராத்தில் மக்கள் தவிப்பு ஒரே மாநகராட்சி வார்டுக்கு 4 எம்பி.க்கள், 5 எம்எல்ஏ.க்கள்: எல்லை குழப்பத்தால் ஒரு வசதியும் கிடைக்கவில்லை

அகமதாபாத்:  ஐந்து எம்எல்ஏ.க்கள், 5 எம்பிக்கள்  இருந்த போதிலும், ஒரு வசதியும் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். ஆச்சர்யமாக இருக்கிறது. உண்மைதான். குஜராத்தில்தான் இந்த விநோதம் அரங்கேறி வருகிறது. குஜராத் மாநிலம், அகமதாபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு வார்டுதான் லம்பா. 44 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதன் கவுன்சிலாக கலு பர்வாத் என்ற சுயேச்சை இருக்கிறார். பெயருக்குதான் இவர் கவுன்சிலரே தவிர, இவரால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது.

 காரணம், லம்பா வார்டின் பெரும்பாலான பகுதிகள், திசைக்கு ஒரு பக்கமாக  5 எம்எல்ஏ தொகுதிகள், 4 எம்பி.க்கள் தொகுதிகளுக்குள் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த வார்டு மக்களுக்கு தங்களின் எம்எல்ஏ, எம்பி யார் என்பதே பெரும்பாலும் தெரியாது. எல்லை வரையறையில் அவ்வளவு குழப்பங்கள். வெஜல்பூர், தஸ்க்கோரி, தனிலிம்டா, வாத்வா, மணிநகர் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லைகள், இந்த வார்டில் மூக்கை நுழைத்து உள்ளன. அதேபோல், கெடா, காந்திநகர், அகமதாபாத் மேற்கு, அகமதாபாத் கிழக்கு ஆகிய 4 எம்பி.க்கள் தொகுதியிலும் இந்த வார்டின் பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

இது பற்றி கவுன்சிலர் கலு பர்வாத் கூறுகையில், ‘பல சட்டப்பேரவை, மக்களவை தொகுதிகளில்  எங்கள் வார்டின் எல்லை பகுதிகள் இருப்பதால், இங்கு வசிக்கும் மக்கள் ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். தங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படும் போது, எந்த எம்எல்ஏ, எந்த எம்பி.யை நாடுவது என்பது கூட  தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். எல்லை பிரச்னைகளால் எம்பி, எம்எல்ஏ.க்களின் திட்டங்களும் இங்கு  கிடைப்பது இல்லை,’ என தெரிவித்தார். மக்கள் கூறுகையில், ‘தொகுதி எல்லை பிரச்னையால் நாங்கள்தான் பாதிக்கப்படுகிறோம். யார் செய்வது என்ற மோதலில், எங்கள் பகுதிக்கு நல்ல சாலை, கழிநீர், குடிநீர் குழாய் வசதிகள் செய்யப்படுவது இல்லை. மேடு பள்ளமாக இருக்கும் சாலைகள் சீரமைக்கப்படுவதும் இல்லை,’ என்றனர்.   



Tags : Gujarat , Gujarat, People suffering, Corporation Ward, Boundary confusion, A facility, not available
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...