மஸ்க்கை பின்பற்றும் ஜுகர்பெர்க் மெட்டா நிறுவனத்திலும் 11,000 ஊழியர் டிஸ்மிஸ்

நியூயார்க்: டிவிட்டரை தொடர்ந்து, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிலும் 11 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டிவிட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க், உலகம் முழுவதும் டிவிட்டரில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதத்தினர் பணிநீக்கம் செய்துள்ளார். இவரை பின்பற்றியுள்ள பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவும், இந்த வாரம் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில், மெட்டா நிறுவனத்தில் 11 ஆயிரம் ஊழியர்கள் நேற்று அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மெட்டா நிறுவன ஊழியர்களுக்கு, இதன் உரிமையாளர் மார்க் ஜுகர்பெர்க் எழுதியுள்ள கடிதத்தில், ‘ஆன்லைன் வர்த்தகம் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பி விட்டது மட்டுமின்றி, மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி, போட்டிகள் அதிகரிப்பு, சிக்னல் கிடைக்காமல் போவது ஆகியவற்றினால் நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்து விட்டது. இதற்கு நானே முழு பொறுப்பையும் ஏற்று கொள்கிறேன். இதனால், குறிப்பிட்ட செலவினங்களைக் குறைப்பதற்காக, 11 ஆயிரம்  திறமையான ஊழியர்களை, அதாவது 13 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யவும், அடுத்தாண்டின் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்துள்ளேன். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 4 மாத அடிப்படை சம்பளம் வழங்கப்படும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: