செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக சந்தேகம் டிஆர்எஸ் எம்எல்ஏ.க்களிடம் பேரம் பேசியதில் தொடர்பா?: ஆளுநர் தமிழிசை பேட்டி

ஐதராபாத்: ‘டிஆர்எஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதில் தொடர்பா?’ என்பது குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை பரபரப்பு பேட்டியளித்து உள்ளார். மேலும், ‘தனது போன் ஒட்டு கேட்கப்படுகிறதா?’ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளார். தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் எந்த பிரச்னை வந்தாலும் ராஜ்பவனுக்கு சென்று போராட்டம் நடத்த வேண்டும் என்கிறார்கள். மக்கள் இங்கு வருவதை யாரும் தடுக்கவில்லை. எம்எல்ஏக்கள் (டிஆர்எஸ்) பேரம் பேசப்பட்ட பண்ணை வீடு வழக்கிலும், ராஜ்பவனை இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  அதனால் தான் எனது முன்னாள் பாதுகாவலர் துஷாரை இந்த வழக்கில்  கொண்டு வந்தனர்.  

ஆடியோ டேப் விவகாரத்திலும் ராஜ்பவன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறிப்பாக துஷாரின் பெயர் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ராஜ்பவனுக்கும் பங்கு இருப்பதாக ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது போன் ஒட்டு கேட்கப்படுமா? என்ற சந்தேகம் உள்ளது.  எனது தனிப்பட்ட சுதந்திரம் மீறப்படுகிறது. துஷார் போன் செய்து தீபாவளி வாழ்த்து சொன்னால் பண்ணை வீடு விவகாரத்தில் எப்படி அவர் பெயர் கொண்டு வரப்பட்டது. என் போனை ஒட்டு கேட்க வேண்டுமானால் என் போனையும் தருகிறேன். மாநிலத்துக்கு மாநிலம் ஆளுநர்களின் பிரச்னைகளும், சர்ச்சைகளும் வேறுபடுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.   

Related Stories: