ஆதிதிராவிடர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தேசிய ஆதிதிராவிடர் நிதி ரூ.20 கோடி ஒதுக்கீடு: துறை செயலாளர் தகவல்

சென்னை: ஆதிதிராவிடர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தேசிய ஆதிதிராவிடர் நிதியில் இருந்து ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், துறை மூலம் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் நேற்று ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்புதல், அவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டாக்களை வழங்குதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உரிய முறையில் அமல்படுத்துதல், அவர்களுக்கான குடியிருப்புகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்த கூட்டத்தில், நலத்துறை செயலாளர் ஜவஹர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜவஹர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆதிதிராவிடர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் பொருட்டு தேசிய ஆதிதிராவிடர் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கடன் திட்டங்களை தாட்கோ மூலம் செயல்படுத்த ஏதுவாக கூடுதல் அரசு உத்தரவாதம் ரூ.20 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது’’என்று கூறியுள்ளார்.

Related Stories: