விற்ற வீட்டை திரும்ப வாங்குவதாக கூறி சிதம்பரத்தில் இருந்து தொழிலதிபர் காரில் கடத்தல்: 2 நாளாக லாட்ஜில் வைத்து சித்ரவதை; செல்போன் உதவியால் நீலாங்கரையில் போலீசார் மீட்டனர்

சென்னை: சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட மும்பை தொழிலதிபரை நீலாங்கரையில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக, 4 பேரை கைது செய்தனர். தஞ்சை மாவட்டம், பாபநாசம் வடக்கு மாங்குடியை சேர்ந்தவர் ஹாஜா மொய்தீன் (52). இவர், மும்பையில் சொந்த தொழில் செய்து வருகிறார். இவருக்கு நீலாங்கரை, சிதம்பரம் ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இதற்கிடையே கடந்த 2017ம் ஆண்டு சிதம்பரத்தை சேர்ந்த ஜமால் (எ) ஜமாலுதீன் என்பவரின் வீட்டை ரூ.16 லட்சத்துக்கு ஹாஜா மொய்தீன் வாங்கியுள்ளார்.

இதையடுத்து, ஒரு இடம் விற்பனை தொடர்பாக கடந்த ஒரு மாதமாக தஞ்சாவூரில் உள்ள சகோதரி வீட்டில் ஹாஜா மொய்தீன் தங்கி, அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இச்சமயத்தில், தன்னிடம் வாங்கிய வீட்டை திருப்பி தரும்படியும், அதற்கான தொகையை கொடுத்துவிடுவதாக சிதம்பரத்தை சேர்ந்த ஜமால் வலியுறுத்தி வந்துள்ளார். இதை உண்மை என நம்பி, கடந்த 5ம் தேதி ஹாஜா மொய்தீன் சிதம்பரத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது, ஜமால் மற்றும் அவரது கூட்டாளிகளான செல்லப்பன், விஜயபாஸ்கர், ரவீந்திரன் ஆகிய 4 பேரும் ஹாஜா மொய்தீனை ஒரு லாட்ஜில் 2 நாட்களாக கட்டி போட்டு, சிதம்பரத்தில் ஜமாலுக்கு சொந்தமான வீட்டு ஆவணங்களை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். சென்னை நீலாங்கரையில் உள்ள வங்கி லாக்கரில் ஜமால் வீட்டின் ஆவணங்கள் இருப்பதாக ஹாஜா மொய்தீன் கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னைக்கு ஹாஜா மொய்தீனை ஜமால் உள்பட 4 கூட்டாளிகளும் காரில் கடத்தி வந்துள்ளனர். அச்சமயத்தில் தனது மனைவியிடம் ஜமால் உள்பட 4 பேர் சென்னைக்கு காரில் கடத்தி செல்வதாக ஹாஜா மொய்தீன் செல்போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தனது மைத்துனர் அக்கில் என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் காரில் கடத்தி செல்லப்படும் லைவ் லொகேஷனை ஹாஜா மொய்தீன் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து, நீலாங்கரை போலீசில் ஹாஜா மொய்தீனின் மைத்துனர் அக்கில் புகார் அளித்தார்.

இப்புகாரின்பேரில் நேற்று முன்தினம் மாலை நீலாங்கரையில் குறிப்பிட்ட வங்கி முன்பு போலீசார் சாதாரண உடையில் கண்காணித்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு சிதம்பரத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ஹாஜா மொய்தீனை மீட்டனர். அவரை கடத்தி வந்த ஜமால் (எ) ஜமாலுதீன், செல்லப்பன், விஜயபாஸ்கர், ரவீந்திரன் ஆகிய 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைதொடர்ந்து, ஹாஜா மொய்தீனை அடைத்து வைத்த இடம், அவரை கடத்திய இடம் சிதம்பரம் என்பதால் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், சென்னை நீலாங்கரைக்கு சிதம்பரம் டவுன் போலீசார் விரைந்து வந்து, நேற்று முன்தினம் இரவு காஜா மொய்தீன் மற்றும் அவரை காரில் கடத்தி வந்த 4 பேர் கும்பலையும் சிதம்பரத்துக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: