×

தமிழகம் முழுவதும் போலி வங்கி தொடங்கி மோசடி லண்டன் பட்டதாரியின் வங்கி கணக்குகள் முடக்கம்: முதலீடு செய்த 3 ஆயிரம் வாடிக்கையாளர்களின் கணக்குகள் ஆய்வு; ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் சிக்குகின்றனர்

சென்னை: தமிழகம் முழுவதும் போலி வங்கி தொடங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபோஸ் தொடர்பான வங்கி கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். தமிழகத்தில் பல இடங்களில் ‘ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி’ என்ற பெயரில் போலி வங்கி தொடங்கி பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் ஒருவர் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின் படி, ‘ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கியின் முக்கிய குற்றவாளியான சந்திரபோஸ் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர், சென்னை அம்பத்தூர் லேடான் தெரு வி.ஜி.என் பிரின்ட் பார்க் என்ற இடத்திய வங்கியின் தலைமையிடம் மற்றும் 9 இடங்களில் வங்கியின் கிளை அலுவலகத்தை சீல் வைத்தனர்.

இது குறித்து சந்திரபோஸ் கூறியதாக போலீசார் கூறியதாவது: சந்திரபோஸ் லண்டனில் எம்பிஏ பட்டம் முடித்த பிறகு சென்னை வந்தார். கடந்த 2016ம் ஆண்டு சென்னையில் சிறிய அளவில் பைனான்ஸ் நிறுவனம் தொடங்கி, பிறகு அதை நிதி நிறுவனமாக மாற்றினார். நிதி நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழகம் முழுவதும் கிளைகள் தொடங்கி பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பல சலுகைகளுடன் கடன் வழங்கியுள்ளார். அதில் பணம் கொட்டியதால், தனது நிதி நிறுவனத்தை ரிசர்வ் வங்கி அங்கீகாரம் வழங்கியது போல் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி என்று மாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

6 ஆண்டுகளாக நடத்தி வந்த நிதி நிறுவனத்தை கடந்த ஓராண்டாக வங்கியாக மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு லண்டனில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் பலர் உதவியதாக விசாரணையின் மூலம் சந்திரபோஸ் கூறியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். போலி நிறுவனம் பெயரில் பிரபல தனியார் வங்கியில் உள்ள கணக்கில் வாடிக்கையாளர்களின் பணத்தை வரவு வைத்துள்ளனர். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிரபல தனியார் வங்கியின் கணக்குகளில் உள்ள ரூ.57 லட்சம் பணத்தை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

அதேபோல், கைது செய்யப்பட்ட சந்திரபோஸ் பயன்படுத்திய பல்வேறு வங்கிகளில் உள்ள கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். இதற்கிடையே போலி வங்கியின் தலைவர் சந்திரபோஸ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், ‘ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி’யில் முதலீடு செய்தும், கணக்கு தொடங்கிய நபர்கள் வங்கி மீது புகார் அளித்து வருகின்றனர். இதனால் கைது செய்யப்பட்ட சந்திரபோஸை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Fraud started across Tamil Nadu by fake bank Bank accounts of London graduate are frozen: Accounts of 3,000 customers who invested are examined; Retired bank officials are trapped
× RELATED பிட் காயினில் முதலீடு செய்த பணத்தை...