×

சிதம்பரம் கோயில் உள்ள இடம் அரசுக்கு சொந்தமானது: அமைச்சர் சேகர் பாபு திட்டவட்டம்

சென்னை: சிதம்பரம் கோயில் அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமானது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியில் மேம்பாட்டு பணிகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் ஹரிப்ரியா , காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்விற்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அறநிலையத்துறையின் மூலம் நடத்தப்பப்படுகின்ற பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட வேண்டுமெனவும், அதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டுமெனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியை பொருத்தவரை தற்போது 1180 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அடுத்த ஆண்டில் கூடுதலாக 300 மாணவர்கள் புதிதாக சேர்வார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இப்பள்ளியின் மாணவர்களுக்காக ரூபாய் 13 கோடி செலவில் 42 அறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்படவுள்ளது. இது வறுமை கோட்டிற்கு கீழும், நடுத்தர மக்கள் அதிகமாக மக்கள் வசிக்கின்ற பகுதி என்பதால் கல்விக் கட்டணத்தை குறைத்துள்ளோம். சிதம்பரம் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல. அந்த கோவிலின் வருமானங்களை முறையாக கணக்கு கேட்கின்ற பொழுது கணக்கு காட்டுவது தீட்சிதர்களின் கடமை. அதேபோல் நிர்வாகத்தில் இருக்கின்ற குளறுபடிகளை கேள்விகளாக கேட்கின்ற போது அதற்கு பதில் சொல்வதும் அவருடைய கடமை. அந்த கோயிலில் மன்னர்களால் சேர்த்து வைக்கப்பட்ட, வழங்கப்பட்ட சொத்துக்கள், நகைகள், விலைமதிப்பற்ற பொருட்களுடைய நிலையை ஆய்வு செய்வதும் எங்கள் கடமை.

இதற்கு முழுவதும் ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தால் அதற்கான விளக்கத்தை நாங்களும் நீதிமன்றத்தில் எடுத்து சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம். சிதம்பரம் கோயில் உள்ள இடம், அரசுக்கு சொந்தமானது.  இருந்தாலும் தற்போது அறநிலைத்துறையின் ஒன்று குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கையும் தந்திருக்கின்றது. தற்போது நகைகள் சரி பார்க்கின்ற பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும், அந்த கோயில் இடம் அரசுக்கு சொந்தமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chidambaram ,Govt ,Minister ,Shekhar Babu , Chidambaram temple site belongs to Govt: Minister Shekhar Babu plans
× RELATED காங்கிரஸ் கட்சியின் தேர்தல்...