×

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தையடுத்து மூடப்பட்ட பள்ளியை திறப்பது குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? தமிழக அரசு தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் மாணவி மரணத்தையடுத்து  கடந்த ஜூலை 17ம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடமைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா, சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா போன்ற கேள்விகள் எழுப்பினர்.

பள்ளி நிர்வாகம் அதற்கு தந்த பதிலில் ஆய்வுக்குழு திருப்தி அடைந்துள்ளது. மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன், ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும். அறிக்கை கிடைத்த பின்னர் அதுகுறித்து முடிவு செய்யப்படும். அடுத்த விசாரணையின்போது அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Kallakurichi ,Tamil Nadu government , What is the government's stand on reopening the school that was closed after the death of the Kallakurichi schoolgirl? Court order to inform Tamil Nadu government
× RELATED பங்குச்சந்தையில் நஷ்டத்தால் விரக்தி...