மாணவர் ஷாரோன் கொலை வழக்கு குமரி கல்லூரி, லாட்ஜ்களுக்கு கிரீஷ்மாவை அழைத்து வந்து விசாரணை: குழித்துறையில் வைத்தும் விஷம் கொடுத்ததாக வாக்குமூலம்

நாகர்கோவில்: காதலன் ஷாரோனை அவர் படித்த கல்லூரியில் வைத்தும் கொல்ல முயன்றதாக கிரிஷ்மா கூறியதையடுத்து கல்லூரிக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். குமரி மாவட்டம் நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன் கொலை வழக்கில், அவரது காதலியும், கல்லூரி மாணவியுமான கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். அவரை காவலில் வைத்து திருவனந்தபுரம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஜான்சன் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் படிக்கும் கல்லூரிக்கு கிரீஷ்மாவை ஷாரோன் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கிரீஷ்மா ஒரு மருந்துக் கடையிலிருந்து டோலோ மாத்திரைகளை வாங்கி தண்ணீரில் நனைத்து  பொடித்து தனது பேக்கில் மறைத்து வைத்துள்ளார்.

இருவரும் கல்லூரிக்கு வரும் வழியில் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் ஜூஸ் பாட்டில் வாங்கியுள்ளனர். கல்லூரிக்கு சென்றவுடன் தனக்கு கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அங்கு வைத்து ஜூசில் டோலோ மாத்திரையை கிரீஷ்மா கலந்துள்ளார். அங்கு வைத்து ஜூசை குடிக்க கொடுத்தபோது வழியில் எங்காவது வைத்து குடிக்கலாம் என்று ஷாரோன் கூறியுள்ளார். அங்கிருந்து குழித்துறை பழைய பாலத்துக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு வைத்து ஜூஸ் சேலஞ்ச் போட்டி என்று கூறி டோலோ மாத்திரை கலந்த ஜூசை ஷாரோனுக்கு கிரீஷ்மா கொடுத்துள்ளார். கசப்பாக இருந்ததால் ஜூஸ் முழுவதையும் அவர் கீழே கொட்டிவிட்டார். வீட்டுக்கு சென்ற பிறகும் ஷாரோன் வாந்தி எடுத்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே அவரது பெற்றோர் போலீசிடம் தெரிவித்திருந்தனர்.

கிரீஷ்மா கூறிய இந்த தகவலை உறுதி செய்வதற்காக குழித்துறை பாலம், திருவிதாங்கோட்டில் ஜூஸ் வாங்கிய கடை மற்றும் ஷாரோன் படித்த கல்லூரிக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கிரீஷ்மாவை அழைத்துச் சென்று விசாரித்தனர். ஷாரோனின் நண்பர்களிடமும் கல்லூரி நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் திருவிதாங்கோட்டில் ஜூஸ் வாங்கிய கடையில் விசாரித்துவிட்டு குழித்துறை பழையபாலம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த சம்பவத்தை கிரீஷ்மா நடித்து காட்டியுள்ளார். பின்னர் திற்பரப்பு சென்றுவிட்டு, படபச்சை ரோட்டில் உள்ள லாட்ஜுக்கு சென்றனர். அங்கு இருவரும் ஒன்றாக தங்கிய அறையில் தடயங்கள் ஏதாவது கிடக்கிறதா? என்பதையும் போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் அவரை கேரளா கொண்டு சென்றனர். இதற்கிடையே கிரீஷ்மாவின் 7 நாள் போலீஸ் காவல் இன்று நிறைவடைகிறது.

* அரியர் தேர்வு

ஷாரோன் நெய்யூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்தார். 3 ஆண்டு முடித்த பிறகு ஒரு வருடம் இன்டன்ஷிப் பிராக்டிக்கல் பயிற்சியை முடிக்க வேண்டும். இதில் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றால் அரியர் தேர்வு எதுவும் இருக்ககூடாது. ஆனால் ஷாரோனுக்கு சில பாடங்களில் அரியர் இருந்துள்ளது. இந்த நிலையில் ஷாரோன் கடந்த செப்டம்பர் 13ம்தேதி கல்லூரிக்கு அரியர் தேர்வு எழுத வந்தபோது தான் கிரீஷ்மாவை உடன் அழைத்து வந்துள்ளார். நேற்றும் அரியர் தேர்வு நடந்தது. ஷாரோன் உயிரோடு இருந்திருந்தால் நெய்யூர் கல்லூரியில் நேற்று நடந்த அரியர் தேர்வை எழுதியிருப்பார்.

Related Stories: