வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவர்களின் ஆடையை களைந்து ராகிங் செய்த 7 பேர் சஸ்பெண்ட்: கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி முதலாமாண்டு மாணவர்களின் ஆடையை களைந்து ராகிங் செய்த புகாரின்பேரில் 7 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் பாகாயம் சிஎம்சி தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களை அரை நிர்வாணமாக்கி அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து ஓட விட்டு இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ டிவிட்டர் உட்பட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சிஎம்சி மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துக்கும், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும், டெல்லியில் உள்ள ராகிங் தடுப்பு பிரிவுக்கும் இதுதொடர்பான புகார் கடிதம் வீடியோ பதிவுடன் வந்தது. டெல்லி ராகிங் தடுப்பு பிரிவு, தங்களுக்கு வந்த புகார் கடிதத்தை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு உரிய நடவடிக்கைக்காக பரிந்துரைத்து அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் தங்களுக்கு கிடைத்த புகார் கடிதத்தை வைத்து விசாரணையை தொடங்கியுள்ள சிஎம்சி மருத்துவக்கல்லூரி நிர்வாகம், முதல்கட்டமாக சந்தேகத்துக்கு உரிய 7 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதுடன் தொடர் விசாரணையிலும் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக சிஎம்சி மருத்துவக்கல்லூரி தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘ராகிங்கில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையும் டெல்லி ராகிங் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றனர்.

Related Stories: