அக்கா கணவரையே வளைத்த தங்கை ரூ.5 லட்சத்திற்கு குழந்தையை விற்ற தாய் சேலம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சேலம்: சேலத்தில் ரூ.5 லட்சம் பேரம் பேசி விற்பனை செய்யப்பட்ட குழந்தையின் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதில் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து, பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை ரூ.5 லட்சத்திற்கு பேரம் பேசி விற்பனை செய்ய வந்த கும்பலை சேலத்தில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதுதொடர்பாக, ஈரோட்டை சேர்ந்த லதா(35), திருச்செங்கோடு குச்சிப்பாளையத்தை சேர்ந்த வளர்மதி (25), இவரது கணவர் மதியழகன்(30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.

இக்குழந்தையின்தாய் கஸ்தூரி, அவரது சகோதரி காயத்ரி ஆகியோரை திருச்செங்கோட்டில் இருந்து நேற்று சேலம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் குழந்தை விற்பனை கும்பல் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. திருவாரூர் ஆணைதென்பாதி என்ற ஊரைச்சேர்ந்தவர் ராமராஜன். விவசாயம் செய்து வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த காயத்ரியை (24) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் காயத்ரியின் தங்கை கஸ்தூரி (23), அக்கா கணவர் ராமராஜனை வளைத்துக்கொண்டார். தங்கையே கணவரை அபகரித்துக்கொண்டாரே என்ற அதிர்ச்சியில் காயத்ரி, வீட்டிலிருந்து வெளியேறி திருச்செங்கோட்டிற்கு வந்தார். அங்கு தங்கியிருந்து தறித்தொழில் செய்து வருகிறார்.

இதற்கிடையில் அக்கா கணவருடன் குடும்பம் நடத்திய கஸ்தூரிக்கு 4 மற்றும் 3 வயதில் பெண் குழந்தைகள் பிறந்தன. அதன்பின் மீண்டும் கர்ப்பமான மனைவியின் நடத்தையில் ராமராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  தினமும் கஸ்தூரியை அடித்து கொடுமைப்படுத்தினார். 6 மாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரி, திருச்செங்கோட்டில் உள்ள சகோதரி காயத்ரி வீட்டிற்கு வந்தார். அப்போது திருச்செங்கோடு குச்சிப்பாளையத்தை சேர்ந்த வளர்மதியுடன் பழக்கம் ஏற்பட்டது. குழந்தை விற்பனை கும்பலை சேர்ந்த வளர்மதி, கஸ்தூரிக்கு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து கவனித்துக்கொண்டார். வீட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார்.அதற்கு பிரதிபலனாக குழந்தை பிறந்ததும் அக்குழந்தையை தன்னிடம் கொடுத்துவிடுமாறு வளர்மதி கேட்டுள்ளார். இதற்காக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். கஸ்தூரியும் ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளன. மூன்றாவது பிறக்கும் குழந்தையை வளர்மதியிடமே கொடுக்க சம்மதித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கஸ்தூரிக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்ற கஸ்தூரியிடம் வளர்மதி ஏற்கனவே பேசியபடி, குழந்தையை வாங்கிக்கொண்டு, புரோக்கர் லதாவுடன் சேலம் வந்துள்ளார். ரூ.5 லட்சத்திற்கு சேலத்தை சேர்ந்த விவசாயி அன்புவிடம் விற்பனை செய்ய பேரம் பேசியுள்ளார். இதற்காக முன்பணமாக ரூ.38 ஆயிரம் பெற்றுள்ளார். அன்புவிடம் கொடுப்பதற்காக குழந்தையை கொண்டுவந்த போதுதான் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

இதுகுறித்து விற்கப்பட்ட குழந்தையின் தாய் கஸ்தூரி கூறுகையில், ‘‘கணவர் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தினார். அவரது அடி தாங்க முடியாமல் அக்கா வீட்டிற்கு வந்தேன். இங்கு வளர்மதியுடன் பழக்கம் ஏற்பட்டது. குழந்தை பிறந்ததும் எனது அக்காவுக்குகூட தெரியாமல் வளர்மதியிடம் குழந்தையை கொடுத்தேன். நான் தவறு செய்துவிட்டேன். குழந்தையை என்னிடமே கொடுத்து விடுங்கள். இனிமேல் நானே வளர்க்கிறேன்’ என போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று குழந்தையின் தாய் கஸ்தூரி, அவரது சகோதரி காயத்ரி ஆகியோரை போலீசார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். குழந்தையை தாயிடம் ஒப்படைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

* கர்ப்பிணிகளுக்கு சோறுபோட்டு வளர்க்கும் கும்பல் தலைவி

கணவருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வளர்மதி பற்றி பரபரப்பு தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஈரோட்டிற்கு வேலை வாய்ப்பு தேடி வரும் இளம்பெண்களை குறி வைத்து சினை முட்டையை பெற்றுக்கொடுத்து பெரும் தொகையை கமிஷனாக பெற்றுள்ளார். சமீபத்தில் சினை முட்டை விவகாரம் பெரிதாகி ஈரோட்டில் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதால் குழந்தைகளை விற்கும் தொழிலுக்கு மாறியுள்ளார்.

இவர்தான் கஸ்தூரிக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து வாடகையையும் அவரே கொடுத்துள்ளார். சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அவரே வாங்கிக் கொடுத்து கஸ்தூரியை ஆரோக்கியமாக வளர்த்துள்ளார்.

கஸ்தூரியுடன் மரகதம் என்ற 8 மாத கர்ப்பிணி பெண்ணும் தங்கியிருந்தார். அவரது கணவர் பாலச்சந்திரன். லாரி டிரைவரான இவர் தனது முதல் மனைவி கீதாவுக்கு தெரியாமல் மரகதத்துடன் உறவு கொண்டு அவரை கர்ப்பிணியாக்கியுள்ளார். டிரைவரான பாலச்சந்திரனும் வளர்மதியும் கூட்டாளிகள் என்பது போலீஸ் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது. இளம்பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை கர்ப்பமாக்கி குழந்தை பெற வைத்து அக்குழந்தைகளை அவர்கள் விற்பனை செய்துள்ளார்களா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில்  தீவிரமாக விசாரணை நடத்தினால் பெரும் கும்பல் சிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: