போலீசார் விசாரணையின்போதே லெஸ்பியன் பழக்கத்தை கைவிட மறுத்து கழுத்தை அறுத்துக்கொண்ட இளம்பெண்: பென்னாகரம் காவல் நிலையத்தில் பரபரப்பு

பென்னாகரம்: லெஸ்பியன் பழக்கத்தை கைவிட மறுத்த இளம்பெண்களுக்கு, காவல் நிலையத்தில் போலீசார் அறிவுரை கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு, கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் இவருடன் அதே கல்லூரியில் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இருவரும் தினமும் கல்லூரிக்கு ஒன்றாக பஸ்சில் செல்வதால் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் லெஸ்பியனாக மாறிவிட்டனர். கடந்த 2 ஆண்டாக இந்த பழக்கம் நீடித்தது. இதனிடையே கோவையில் வேலை கிடைத்து 22 வயது பெண் அங்கு சென்றுவிட்டார். அப்போது செல்போனில் பேசியும், விடுமுறையில் ஊருக்கு வரும் போதும் ஒன்றாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதமாக 21 வயது பெண் மீது பெற்றோருக்கு, சந்தேகம் எழுந்துள்ளது. இதை அறிந்து அவர் கடந்த 30ம் தேதி, பெற்றோரிடம் தோழியை விரும்புவதாகவும், இருவரும் சேர்ந்து வாழப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் இரு இளம்பெண்களையும், அவர்களது பெற்றோரையும் வரவழைத்து ஒரு வாரமாக விசாரித்தனர். நேற்றும் இருதரப்பினரையும் அழைத்து பேசினர்.

தோழிகளிடம் இதுபோன்ற நடவடிக்கை வாழ்க்கைக்கு ஒத்து வராது. பெற்றோர் சொல்வது போல் நடந்து கொள்ளுங்கள் என போலீசார் அறிவுரை கூறினர். அதை ஏற்க மறுத்த இருவரும், பெண்கள் சேர்ந்து வாழ சட்டத்தில் இடமுள்ளது. எனவே நாங்கள் சேர்ந்து வாழ்வோம். எங்களை யாரும் பிரிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் போதே, திடீரென 22 வயது இளம்பெண் தனது பேக்கில் வைத்திருந்த பிளேடை எடுத்து கையிலும், கழுத்திலும் அறுத்துக்கொண்டார்.

இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட போலீசார், பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரவீணா, மருத்துவமனைக்கு வந்து அந்த இளம்பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார். பின்னர் இளம்பெண், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். லெஸ்பியன் விவகாரத்தில் பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே கை, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது பென்னாகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: