×

சிவசேனா எம்பி ராவத்துக்கு ஜாமீன்

மும்பை: பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் 100 நாட்களுக்குப் பிறகு சிவசேனா உத்தவ் அணி எம்பி சஞ்சய் ராவத்துக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மகாராஷ்டிரா மாநிலம், கோரேகாவில் உள்ள பத்ரா சால் என்று அழைக்கப்படும் சித்தார்த் நகரில் 47 ஏக்கர் நிலத்தில் 672 குடும்பங்கள் வசிக்கின்றன. 2008ம் ஆண்டில் இந்த வீடுகளை மேம்படுத்த  மகாராஷ்டிரா வீட்டுவசதி ஆணையமான மஹாடா முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தம் குரு ஆஷிஷ் கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் மோசடி நடந்தது. பத்ரா சால் நிலத்தை  வேறு பில்டர்களுக்கு ரூ.1,034 கோடிக்கு ஆஷிஷ் நிறுவனம் விற்று விட்டது.

இதில் கணிசமான தொகையை சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு லஞ்சமாக தரப்பட்டதாக குற்றம்சாட்டிய அமலாக்கத் துறை, அவரின் குடும்ப சொத்துகளை முடக்கியது. இந்த வழக்கில் கடந்த ஜூலை 31ம் தேதி நள்ளிரவில் ராவத் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், 100 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு, ராவத்துக்கும், அவருடன் கைதான பிரவீன் ராவத்துக்கும் மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து உடனடியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத் துறை, வெள்ளிக்கிழமை வரை ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைக்கும்படி கோரியது. இதை நீதிபதிகள் நிராகரித்தனர். இதையடுத்து, 100 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து ராவத் வெளியே வந்தார்.

Tags : Shiv Sena , Bail for Shiv Sena MP Rawat
× RELATED உத்தவின் சிவசேனா போலி: அமித் ஷா கண்டுபிடிப்பு