உயர் பிரிவு ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு

புதுடெல்லி: குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று 3 நீதிபதிகளும், ஏற்புடையது அல்ல என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை   காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரவேற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 103வது திருத்தம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது அல்ல. இந்த தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது,’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது  குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் சலுகை காட்டக்கூடாது. அது, அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: