ஓபிசி தனி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய வழக்கில் பொது நலன் கருதி கொள்கை முடிவை மாற்றலாமே: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆலோசனை

மதுரை: ஓபிசி தனி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய வழக்கில், கொள்கை முடிவை பொதுமக்கள் நலனுக்காக அரசு மாற்றலாமே என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த தவமணிதேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2020ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘இந்தியா முழுவதும் கடந்த 2001ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதே நேரம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கணக்கெடுப்பை தனியாக நடத்தலாம் என பரிந்துரைத்தும் தனி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கணக்கெடுப்பை தனியாக எடுத்து வரைமுறை செய்தால்தான், இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்க உதவியாக அமையும். எனவே, ேதசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரையின்படி வரும் 2021ல் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) தனி கணக்கெடுப்பையும் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஒன்றிய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி ஆஜராகி, ‘‘மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஓபிசி பிரிவின் கீழ் தனியாக கணக்கெடுப்பு நடத்துவது என்பது ஒன்றிய அரசின் கொள்கைரீதியானது. கொள்கைரீதியான முடிவெடுக்காமல் தனி கணக்கெடுப்பு நடத்த இயலாது. கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி கணக்கெடுப்பை நடத்த முடியாது என எவ்வாறு கூற முடியும்? கொள்கை முடிவுகள் என்பது பொதுமக்களின் நலனுக்கானவை. எனவே, பொதுநலன் கருதி கொள்கை முடிவை மாற்றலாமே’’ என்றனர். பின்னர், ஒன்றிய அரசு தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ.22க்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: