×

அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை ஏற்படுத்த சிறப்பு திட்டங்கள் வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி 78% தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 100-க்கும் குறைவானோர் தான்  படிக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் இடம் பெற்றுள்ளது.

எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை 36.05%, அதாவது 11,251 பள்ளிகளில் 30-க்கும் குறைவான மாணவர்கள் மட்டும் தான் பயில்கின்றனர். பல பள்ளிகளில் பத்துக்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் மாணவர்கள் உள்ளனர். இரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை 90% அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1000-க்கும் கூடுதலான மாணவர்கள் இருப்பார்கள். பல அரசு பள்ளிகளில் இடம் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது இரு பிரிவுகள் இருக்கும்; நகர்ப்புற பள்ளிகளில் மூன்று பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது 50 மாணவர்களாவது இருப்பர். ஆனால், இன்று ஒட்டுமொத்த பள்ளியிலுமே 50 மாணவர்கள் படிப்பது அதிசயமாகியிருக்கிறது.

அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டுமானால் அது அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதன்  மூலம் தான் சாத்தியமாகும். இதை உணர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை  ஏற்படுத்துதல், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல், நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு தரமான பயிற்சி அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சிறப்புத் திட்டத்தை வகுத்து, அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்குவதன் மூலம் அரசு பள்ளிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதன் பயனாக அரசு பள்ளிகளை நோக்கி அனைத்துத் தரப்பு மாணவர்களும் படையெடுக்கும் நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.


Tags : BAMA ,Ramadoss , Need special programs to instill confidence in government schools: BAMA founder Ramadoss insists
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...