கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி செயல்படும் மதுபார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வேற்காடு கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தை ஒட்டி, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையோரமாக டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. எனினும், இந்த டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக 24 மணி நேரமும் சகல வசதிகளுடன் ஒரு மதுபான பார் இயங்கி வருகிறது.

இதனால் அந்த பாருக்கு வருபவர்கள் சர்வீஸ் சாலையோரமாக வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு, மது அருந்திய நிலையில் வாகனங்களை ஓட்டி சென்று வருகின்றனர். இதில் பல்வேறு வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த சட்டவிரோத மதுபான பார் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அரசின் மதுபான கடை சூபர்வைசர் தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இங்கு உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். 

Related Stories: