திருச்சி விமான நிலையத்தில் அழகு சாதன பொருட்களில் கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து அழகுசாதன பொருட்களில் கடத்தப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து சென்னை நபரிடம் விசாரிக்கின்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று காலை இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.

இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோதுசென்னையை சேர்ந்த முகமது நிசார் என்பவர் தனது கைப்பையில் வைத்திருந்த அழகு சாதன பொருட்கள், வாசனை திரவிய பாட்டில்களில் தகடு போன்ற வட்ட வடிவில் இரண்டு எண்ணிக்கை, செவ்வக வடிவில் 3 எண்ணிக்கை, நீளவடிவில் 7எண்ணிக்கை என மொத்தம் 259 கிராம் தங்கத்தை கடத்துவதற்காக பதுக்கிவைத்திருந்தார். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.13 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதுபற்றிய விசாரணையில், ‘’அழகு சாதன பொருட்களை சென்னையில் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மர்ம நபர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தங்கம் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட இருந்தது’ என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து நிசாரிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: