சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வராத புதிய கார் பார்க்கிங் கட்டிடம்: வாகன நெரிசலால் பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் ₹250 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 6 அடுக்குமாடி கார் பார்க்கிங் கட்டிடம் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அங்கு வாகன நெரிசலில் சிக்கி பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இக்கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர பயணிகள் வலியுறுத்துகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ₹250 கோடி மதிப்பில் 3.36 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 அடுக்குமாடிகளுடன் கூடிய அதிநவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டிடம் இந்த ஆண்டு துவக்கத்திலேயே கட்டி முடிக்கப்பட்டது. இதில் சுமார் 2 ஆயிரம் கார்களை ஒரே நேரத்தில் 2 ஆயிரம் கார்களை நிறுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் புதிய கார் பார்க்கிங் கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என இந்திய விமானநிலைய ஆணையம் தகவல் தெரிவித்ததே தவிர, இதுவரை பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

இதனால் அங்குள்ள பழைய கார் பார்க்கிங் பகுதியையே சென்னை விமானநிலைய அதிகாரிகள் செயல்பாட்டில் வைத்துள்ளனர். கடைசியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை விமானநிலைய பன்னடுக்கு கார் பார்க்கிங் கட்டிடம் திறக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். எனினும், அக்கட்டிடம் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானநிலைய நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. இந்த வாகன நெரிசலில் பயணிகள் சிக்கி, குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்துக்குள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 10 மாதங்களாக புதிய கார் பார்க்கிங் கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளதால், அவை பழுதடைந்து பாழாகி வரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை விமானநிலையத்தில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பழைய கார் பார்க்கிங் பகுதியை பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கும் பணியை இந்திய விமானநிலைய ஆணையம் துவங்கியுள்ளது. இப்பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம், குறைந்தபட்சம் 6 மாதங்களிலிருந்து புதிய பன்னடுக்கு கார் பார்க்கிங் கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும்வரை செயல்பட அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது. பழைய கார் பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்த அரைமணி நேரத்துக்கு ₹40, 2 மணி நேரத்துக்கு ₹100 வசூலிக்கவும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் பழைய பார்க்கிங் பகுதியையே மீண்டும் செயல்படுத்த சென்னை விமானநிலைய நிர்வாகமும் முடிவு செய்துள்ளது. இதில் ஆயிரத்துக்கும் குறைவான கார்களே நிறுத்த முடியும் என்று தெரிகிறது.

இதன்மூலம் அடுத்த 6 மாதங்களுக்கு புதிய கார் பார்க்கிங் கட்டிடம் செயல்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிகிறது. சென்னை விமானநிலையத்தில் புதிய காா் பாா்க்கிங் கட்டிடம் செயல்பாட்டுக்கு வர தீயணைப்பு துறையினரின் தடையில்லா சான்று கிடைக்காதது மட்டும் காரணம் இல்லை. இக்கட்டிடம் விமானநிலைய வளாகத்துக்குள் அமைந்துள்ளதால் பீரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சென்னை விமானநிலைய வளாகத்தில் ₹250 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன பன்னடுக்கு கார் பார்க்கிங் கட்டிடம் எப்போதுதான் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமோ, வாகன நெரிசலில் இருந்து நாம் எப்போது தப்பிப்போமா என விமான பயணிகள் கவலை தெரிவித்தனர்.

Related Stories: