×

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை திறக்க அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு நிலைப்பாட்டை தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளியை சீரமைக்கப்பட்டு விட்டதால் திறக்க அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு நிலைப்பாட்டை தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது.

இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து கள்ளக்குறிச்சியில் தாக்கப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா?, சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தடுப்பு செயல் விளக்க முகாம் பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளது. மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும். அறிக்கை கிடைத்த பின்னர் பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். மேலும், அடுத்த விசாரணையின்போது இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார். இரு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆய்வுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : High Court ,Government of Tamil Nadu ,Tamil Nadu Government ,Kallakkurichi Private School , The High Court has directed the Tamil Nadu government to state its position in the case seeking permission to open a private school in Kallakurichi
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...