அரசாணை எண் 115ஐ திரும்ப பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மனித வளம் தொடர்பான சீர்திருத்தங்கள் என்று நிதிநிலை அறிக்கையில் சொல்லிவிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக மனிதவள மேலாண்மைத் துறை மூலம் 18-10-2022 நாளிட்ட அரசாணை எண் 115 வெளியிடப்பட்டு இருக்கிறது.  இந்த ஆணையில் குழுவின் ஆய்வு வரம்புகளாக பன்முக வேலைத் திறனோடு பணியாளர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு அமைதல், அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்ளுதல், ‘டி’ மற்றும் ‘சி’ பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புதல், பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களின் பணிச் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவர்களை காலமுறை ஊதியத்தில் அமர்த்துதல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

அரசுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், அதன்மூலம் பணியின் தரம் குறைவதற்கும், இடஒதுக்கீடு என்பதே இல்லாமல் போவதற்கும், அரசின் ரகசியங்கள் வெளியிலே செல்வதற்கும், ஊழல் பெருகுவதற்கும் வழிவகுக்கும்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசு வேலைவாய்ப்பு என்பதே இல்லாமல் போய்விடும் சூழ்நிலை உருவாகும். எனவே, தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட இதர அமைப்புகள் மூலம் உடனடியாக நிரப்புவதற்கும், புதிதாக இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 18-10-2022 நாளிட்ட மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: