×

நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை நீர்மட்டம்!: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்..!!

ஈரோடு: பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில், 105 அடி வரை, 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. பவானிசாகர் அணையை பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் 100 அடி வரையும், அக்டோபர் மாத இறுதிவரை 102 அடியிலும், நவம்பர் 1ம் தேதி முதல் 105 அடி வரையிலும் தண்ணீர் தேக்கப்படும். அணை பாதுகாப்பு விதிகளின்படி இந்த வரையறை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை 102 அடியாக நீடித்து வந்த அணையின் நீர்மட்டம் கடந்த 1ம் தேதி முதல் 105 அடி வரை உயர்த்த அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் எந்த நேரத்திலும் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலை உள்ளதால் எச்சரிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 11 மணிக்கு 104.45 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Bavanisagar Dam ,State , Bhavanisagar dam, people, flood warning
× RELATED அப்போ வேண்டாம்… இப்போ ரெடியாம்… நடிகை...