அரை டவுசருடன் ஓட்டம்..குட்டிக்கரணம் அடக்க மிரட்டல்!: வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகார்..சீனியர் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்..!!

வேலூர்: வேலூரில் தனியார் மருத்துவ கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த புகாரில் சீனியர் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியிலேயே ராகிங் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. அங்கு முதலாமாண்டு படிப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களை சீனியர் மாணவர்கள் கடந்த 9ம் தேதி சந்தித்து ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. ஜூனியர் மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர செய்துள்ளனர்.

அப்போது அவர்கள் மீது தண்ணீரை பாய்ச்சி அடித்து ஆரவாரம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தண்டால் போட வைத்தும், குட்டிக்கரணம் அடிக்க சொல்லியும், மிரட்டினார்களா?.. சீனியர் மாணவர்களின் மிரட்டலுக்கு பயந்து முதலாமாண்டு ஜூனியர் மாணவர்கள் குட்டிக்கரணம் அடித்துள்ளனர். சீனியர் மாணவர்களின் செயலால் முதலாமாண்டு மாணவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை சுட்டிக்காட்டி விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியதோடு, டெல்லியில் உள்ள ராகிங் தடுப்பு பிரிவுக்கும் புகார்கள் சென்றன.

அதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் விசாரணையில் இறங்கியது. முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில், சீனியர் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கல்லூரி முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: