சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 169 நிவாரண மையங்கள் தயார்: அறிக்கை விவரம் வெளியீடு

சென்னை: வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நேற்றைய தினம் (8-11-2022) தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் 4.90 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக 33.93 மி.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 27 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று தென்காசி மாவட்டத்தில் 1 மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4.00 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக நேற்று 48 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 59 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி

* 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

* தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 869 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.

வானிலை முன்னறிவிப்பு

* அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது.

* 9-11-2022 அன்று சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* அடுத்த 48 மணி நேரத்திற்குள், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதன் அருகில் மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்றும், இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 8-11-2022 நாளிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 10-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

* 11-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

* புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

* 12-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

* திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

* இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். (37+6 = 43)

* தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.

* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

* இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 474 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 402 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 72 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 241 தொலைபேசி அழைப்புகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு விபரம்

* இன்று காலை 8.00 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 20.26 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 219 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 679 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அதே போல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.60 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 141 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

Related Stories: