×

அடிலெய்டில் 2வது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல்: பைனலுக்குள் நுழையப்போவது யார்?

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை அடிலெய்ட்டில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்தியா 4 வெற்றிகளுடன் பட்டி யலில் முதல் இடத்தை பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த சுற்றில் 4 வெற்றிகளை பெற்ற ஒரே அணி இந்தியாமட்டும் தான். பேட்டிங்கில கோஹ்லி 246, சூர்யகுமார் யாதவ் 225 ரன் அடித்து சூப்பர் பார்மில் உள்ளனர். கே.எல்.ராகுல் 123, கேப்டன் ரோகித்சர்மா 89 ரன்களே எடுத்துள்ளனர். இவர்கள் நாளை ரன் குவிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.  ஹர்திக் பாண்டியாவும் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட் இடையே கடும் போட்டிஉள்ளது.

இருப்பினும் தினேஷ் கார்த்திக்கிற்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பவுலிங்கில், அர்ஷ்தீப் சிங் 10, ஹர்திக்பாண்டியா 8 விக்கெட் எடுத்துள்ளனர்.  முகமது ஷமி (6),  ஓரளவு சிறப்பாக பந்துவீசினாலும், புவனேஸ்வர்குமார் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சுழலில் அஸ்வின் 6 விக்கெட்டே எடுத்துள்ளார். இருப்பினும் அவர் இடத்தை தக்க வைத்துக்கொள்வார். அக்சர்பட்டேல் பவுலிங் மற்றும் பேட்டிங் என எதிலும் சொல்லிக்கொள்ளும்படி செயல்படவில்லை. இதனால் அவருக்கு பதிலாக தீபக்கூடாஅல்லது சாஹல் சேர்க்கப்படலாம். மறுபுறம் இங்கிலாந்து சூப்பர் 12 சுற்றில் குரூப் 1ல் அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும், 3வெற்றிகளுடன் 2வது இடத்தை பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. கேப்டன் பட்லர் 119, அலெக்ஸ் ஹேல்ஸ் 125 ரன் அடித்துள்ளனர். மற்ற யாரும் 100 ரன்னை தாண்டவில்லை. இருப்பினும் தனி நபராக வெற்றியை தேடித்தரும் அதிரடி வீரர்கள் உள்ளனர்.

மொயின்அலி, பென்ஸ்டோக்ஸ், சாம்கரன், லிவிங்ஸ்டன், கிறிஸ்வோக்ஸ் என ஆல்ரவுண்டர்கள் பட்டாளம் நிறைந்துள்ளது. ஆனால் யாரும் நிலையான ஆட்டத்தை  வெளிப்படுத்தாதது தான் மைனசாக உள்ளது. பவுலிங்கில் சாம்கரன் (10விக்கெட்) கட்டுக்கோப்பாக பந்து வீசி வருகிறார். நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் மாலன் காயம் காரணமாக விலகிய நிலையில், பில்சால்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே வேகப்பந்துவீச்சாளர் மார்க்வுட் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் நாளை அவர் களம் இறங்குவது சந்தேகம் தான். இருஅணிகளும் அரையிறுதியில் வென்று பைனலுக்குள் நுழைய போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கப்போவது உறுதி. இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது.

இந்திய உத்தேச அணி: கே.எல்.ராகுல், ரோகித்சர்மா (கே), விராட்கோஹ்லி, சூர்யகுமார் யாதவ்,  ஹர்திக்பாண்டியா, ரிஷப் பன்ட் (அ)தினேஷ் கார்த்திக், அக்சர்பட்டேல்(அ) தீபக்கூடா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து அணி: பட்லர் (கே), ஹேல்ஸ், பில்சால்ட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், சாம்கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க்வுட் (அ) கிறிஸ் ஜோர்டன்.

Tags : India ,England ,Adelaide , India vs England 2nd semi-final in Adelaide tomorrow: Who will enter the final?
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!