×

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலான மழை

நெல்லை : நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலான மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இந்த காலங்களில் நல்ல மழை கிடைத்து வருகிறது. வழக்கமாக வட
கிழக்கு பருவமழை அக்.18ம் தேதி துவங்கி விடும். இந்த ஆண்டு 10 நாட்கள் தாமதமாகத் தான் மழை தொடங்கியது. எனினும் இதுவரை மிதமான மழையே இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. நெல்லையில் நேற்று காலை சற்று வெயில் நிலவிய போதிலும் பிற்பகலில் முக்கூடல், விஎம் சத்திரம், மகாராஜநகர், அரசு மருத்துவமனை, தியாகராஜநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறிது நேரம் நல்ல மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை. மார்க்கெட் பகுதிகளில் லேசான சாரல் மழை இருந்தது. மாலை 6 மணிக்கு பிறகு பலத்த மழை பெய்தது.

நேற்றைய நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 88.45 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1214 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1204 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைப்பகுதியில் 1 மிமீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 94.78 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.85 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 358 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணைப்பகுதியில் 10.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 48.75 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 2 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நாங்குநேரியில் 2.60 மிமீ, ராதாபுரத்தில் 25.4 மிமீ, கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 4.2 மிமீ, களக்காட்டில் 7.2 மிமீ, மூலக்கரைப்பட்டியில் 2 மிமீ, மாஞ்சோலையில் 31 மிமீ, காக்காச்சியில் 42 மிமீ, நாலுமுக்கு பகுதியில் 598 மிமீ, ஊத்து பகுதியில் 37 மிமீ மழை பதிவாகியுள்ளது.  தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடனாநதி அணையில் 9 மி.மீ, கருப்பாநதியில் 31.5 மி.மீ, குண்டாறு அணையில் 23.8 மி.மீ, அடவிநயினார் அணையில் 12 மிமீ, செங்கோட்டையில் 22.2 மிமீ, சிவகிரியில் 30 மிமீ மழை பதிவாகியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறில் நல்ல மழை பெய்தது. விளாத்திகுளம் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் பரவலான மழை பெய்தது.

Tags : Paddy ,South Kasi ,Thoothukudi , Nellai: There has been widespread rain in Nellai, Thoothukudi and Tenkasi districts. This has increased the water flow to the dams.
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...