×

கடையம் அருகே 3 பேரை கடித்துக் குதறிய கரடி களக்காடு வனப்பகுதியில் திடீர் சாவு-உடற்கூறு ஆய்வுக்கு பிறகு தீ வைத்து எரிப்பு

களக்காடு : கடையம் அருகே 3 பேரை கடித்துக் குதறிய கரடி, மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டு களக்காடு  வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் திடீரென இறந்தது. கரடியின் சடலம் உடற்கூறு ஆய்வுக்கு  பிறகு தீ வைத்து எரிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்புக்கு கடந்த 6ம் தேதி வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த 8 வயதான பெண் கரடி ஒன்று சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போது அவ்வழியாக பைக்கில்  வந்த மசாலா வியாபாரி, அவரை மீட்க முயன்ற சகோதரர்கள் என 3 பேரை கடித்துக் குதறியது. இதில் படுகாயம் அடைந்த மூவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

 இதனால் ஆவேசமடைந்த மக்கள், கரடியை பிடிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடையம் வனத்துறையினர் 2 மயக்க ஊசி செலுத்தி கரடியை உயிருடன் பிடித்தனர். முண்டந்துறை வனப்பகுதியில் கரடி விடுவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருந்த நிலையில் குடியிருப்புகள் நிறைந்துள்ளதால் அப்பகுதியை தவிர்த்து,  நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட  செங்கல்தேரி வனப்பகுதிக்கு வாகனத்தில் கொண்டு வந்து விட்டனர்.

கரடி மயக்கம் தெளிந்து மிகவும் உற்சாகமாக துள்ளிக்குதித்து சென்றதாம். அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்த வனத்துறையினர் அன்று மாலை ரோந்து சென்றபோது விடுவிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கரடி இறந்து கிடந்தது தெரியவந்தது.மயக்க மருந்து அதிகமாக  செலுத்தப்பட்ட கரடியின் சடலைத்தை கைப்பற்றிய வனச்சரகர் பிரபாகரன் தலைமையிலான வனத்துறையினர், களக்காடு தலையணைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து வனத்துறை  கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் கரடியின் உடலை பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கரடியின் மூக்கு, நுரையீரல் பகுதியில்  ரத்தகாயம் இருந்ததாகவும் மற்றும் குடல் பகுதியில் அதிக ரத்தகசிவு இருந்ததாகவும் இதனால் கரடி உயிரிழந்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.  பரிசோதனையைத் தொடர்ந்து கரடியின் சடலத்தை தலையணை வனப்பகுதியில் வனத்துறையினர்  தீ வைத்து எரித்தனர்.

கரடிக்கு நுரையீரல்  பாதிப்பு முன்பே இருந்ததா அல்லது மயக்க மருந்து கூடுதல் அளவில்  செலுத்தப்பட்டதால் உயிரிழந்ததா என்றும் அறிக்கை கேட்டிருக்கிறோம் என வனத்
துறையினர் விளக்கம்  அளித்துள்ளனர். உயிரிழந்த இந்த பெண்  கரடிதான் அதிகமுறை ஊருக்குள் வந்து தொந்தரவு செய்ததாக பொதுமக்கள் குற்றம்  சாட்டியிருந்தனர். பொதுவாக  குட்டியை தொலைத்த பெண் கரடிகள் மிகவும் ஆக்ரோஷமாக குட்டியை தேடி அலையும் என  கூறப்படுகிறது. அதுபோல் இ்ந்த கரடியும் குட்டியை தேடி அடிக்கடி ஊருக்குள்  வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்தும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : Kadayam ,Kalakadu , Kalakadu: The Bear That Bit ௩ People Near Kadayam Was Sapturudu Under Aniseedsia And Relest In The Kalakadu Forest.
× RELATED களக்காடு புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள்