சிவகாசியில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணபாதாளச் சாக்கடை அமைக்க வேண்டும்-பகுதி சபை கூட்டங்களில் பொதுமக்கள் வலியுறுத்தல்

சிவகாசி : சிவகாசியில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண, நகரில் பாதாளச் சாக்கடை அமைக்க வேண்டும் என பகுதி சபைக் கூட்டங்களில் பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  சிவகாசி மாநகராட்சியில்  பெரும்பாலான விடுகளின் கழிவுநீர் கிருதுமால் ஓடை வழியாகச் சென்று, மீனம்பட்டி  கண்மாயில் கலக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகரின் இந்த ஓடையை தூர்வாரவில்லை. இதனால், மழை காலங்களில்  கழிவுநீர் வீடுகளுக்குள்ளும், தெருக்களிலும் பெருக்கெடுத்து  ஓடுகிறது.

கிருதுமால் ஓடையில் ஓட்டல் கடை உரிமையாளர்ள், இறைச்சி  கடைகாரர்கள் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால், சுகாதார கேடு  ஏற்படுகிறது. நகரில் உள்ள பைபாஸ் ரோடு பாரதி நகர், சோலை காலனி, முத்தமிழ்புரம்  காலனி பகுதி வாறுகாலில் வரும் கழிவுநீர் பொத்துமரத்து ஊருணிக்கு செல்கிறது.  இந்த  பகுதியில் உள்ள வாறுகால் முறையாக தூர்வாராததால், கழிவுநீர் வாறுகாலில்  தேங்கி நிற்கிறது. நகரில் லேசான மழை பெய்தாலே சாலையில்  ஆங்காங்கே மழைநீர் தேங்குகிறது.

பாரதி நகரில் உள்ள வாறுகாலில்  மழைநீர் செல்ல வழியின்றி கழிவுநீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து  ஓடுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மருதுபாண்டியர் தெருவில் இருந்து பழைய பஸ்நிலையம் வரை உள்ள  கிருதுமால் ஓடையில், குப்பைக் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம்  ஏற்படுகிறது. இங்கு வீடுகளில் உள்ள கழிப்பறை குழாய்களை நேரிடையாக  கிருதுமால் ஓடையில் பதித்துள்ளனர். இதனால், சுகாதாரக்கேடு உண்டாகிறது. பழைய  பஸ்நிலையம் பின்புறம் உள்ள ஓடையில் முட்புதர்கள் மண்டி மண் மேவி  கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியின்றி மழை காலங்களில் சாலையில்  பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.பாதாளச் சாக்கடை அமைக்க வலியுறுத்தல்:

இந்நிலையில், சிவகாசி மாநகராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கடந்த 2ம் தேதி முதல் 5ம் ேததி வரை 48 வார்டுகளில் கவுன்சிலர்கள் தலைமையில், பகுதி சபை கூட்டங்கள் நடைபெற்றன. கிராம சபை கூட்டத்தை போல பேருராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனடிப்படையில், சிவகாசி மாநகராட்சியில், ஒரு வார்டுக்கு 4 இடங்கள் என 192 இடங்களில் பகுதி சபை கூட்டங்கள் நடத்தபட்டன.

இந்த கூட்டங்களுக்கு வார்டு கவுன்சிலர் தலைவராகவும், உதவியாளர் நிலைக்கு மேல் உள்ள அலுவலர் செயலராகவும், நான்கு மக்கள் பிரதிநிதிகள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். மாநகராட்சி வார்டு 34ல் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநகரில் மேயராக சங்கீதா இன்பம் பொறுப்பேற்ற பின் பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்தி வருகிறார். பஸ்நிலையம் விரிவாக்கம், ெபாத்துமரத்து ஊருணி, பறையன்குளம் கண்மாய் தூர்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது.

திருத்தங்கல் பகுதியில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் கிடந்த சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், பகுதி சபை கூட்டங்களில் மாநகராட்சியின் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பெரும்பான்மையான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகராட்சியில் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் அனைத்து வார்டுகளிலும் நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலான மக்கள் மாநகரில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்த கோரிக்கை வைத்தனர். இந்த பணி துவங்கப்பட்டால் நிறைவேற்ற குறைந்தது 3 ஆண்டுகளாகும். சிவகாசி, திருத்தங்கல் பகுதி தெருக்கள் மிகவும் குறுகியதாக உள்ளன. மாமன்ற கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களின் கருத்து கேட்டு பாதாளச் சாக்கடை திட்டம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: