×

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது பல்வேறு இடங்களில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனினும் வட மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து வட திசையில் நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும். புயலாக மாற வாய்ப்பில்லை. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, புதுச்சேரி கரையோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட தமிழக கரையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் நாளை கணமழையும், நவ. 11,12ல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இதுவரை 238 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குடவாசல், மன்னார்குடி, சென்னை வில்லிவாக்கத்தில் தலா 5 செ.மீ. மழை பொழிந்துள்ளது. இவ்வாறு கூறினார்.


Tags : Bay of Bengal ,Meteorological Department , A new depression formed in the Bay of Bengal is unlikely to become a storm: Meteorological Department informs..!
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...