திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றிய சீதா ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில்; கோவில்கள், சிலைகள், பாதுகாப்பு காரணமாக புகைப்படம் எடுப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. சில கோவில்களில் புகைப்படம் எடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே இது போன்ற புரதானமிக்க கோவில்கள் செல்போன் பயன்பாடு என்பது சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் நாகரிகமான உடை என்பது தற்போது கிடையாது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. கோவில்கள் என்பது சுற்றுலா தளங்கள் அல்ல. அது மக்களின் பயபக்தியை வெளிப்படுத்தக்கூடிய ஒரு இடமாக இருக்கிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் சிலைகளுக்கு முன் நின்று செல்பி எடுப்பது, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது தொடர்கதையாகி வருகிறது. இதுமட்டுமல்லாமல் அந்த கோவில் அர்ச்சகர்களாக இருக்கக்கூடியவர்களே கோவிலுக்குள் செல்பி எடுத்து, பூஜை செய்வதை தங்களுக்கென யூடியூப் பக்கங்கள் திறந்து அதில் பதிவேற்றம் செய்கிறார்கள் இது ஏற்கத்தக்க விஷயமல்ல. குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோவில்கள் சத்திரம் போல் இருக்கிறது. அங்கு யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் என்ற நிலை உள்ளது. இது மாற்றப்பட வேண்டும்.

அருகே உள்ள திருப்பதி தேவஸ்தான கோவில்களில் கோவில் வாசல்களுக்கு கூட செல்போன்களை எடுத்து செல்ல முடியாது. அந்த நிலை தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்பாட்டிற்கு உடனடியாக தடை விதிக்கின்றோம். இந்த சுற்றறிக்கையை இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் உடனடியாக அமல்படுத்த வேண்டும். குறிப்பாக அந்த கோயில் முன்பாக சோதனை சாவடி அமைத்து செல்போன்களை கொண்டு செல்வோர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு பறிமுதல் செய்யக்கூடிய செல்போன்கள் திரும்ப ஒப்படைக்க கூடாது.

கோவிலுக்குள் அர்ச்சகர் உள்பட யாருமே செல்போன் கொண்டு செல்ல கூடாது என்ற சுற்றறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இதனை அந்த வழக்கறிஞர் உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்ட அறிக்கையின் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories: