வேலூர் அடுக்கம்பாறையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வந்த அதிகாரிகளிடம் நடைபாதை வியாபாரிகள் கடும் வாக்குவாதம்

வேலூர் : வேலூர் அடுக்கம்பாறையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் அங்குள்ள நடைபாதை வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரிலும், சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளை தாண்டியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதேபோல் நடைபாதை வியாபாரிகளும் சாலையை மறித்தபடி கடைகளை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இதனால் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுடன் வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை நீடிக்கிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் கடந்த ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி யாரும் சாலைக்கு வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் சிலருக்கு கடை வைக்க அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மீண்டும் சாலையை மறித்தபடி ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளதாக வந்த தகவலை அடுத்து நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வேலூர் தாசில்தார் செந்தில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் விஜயா மற்றும் தாலுகா போலீசார் அங்கு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் சொல்லித்தான் நாங்கள் இங்கு கடை நடத்துகிறோம். எங்களை அகற்றக்கூடாது. ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடைகளை எடுத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கலெக்டர் இங்கு வர வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.

அவர்களை அதிகாரிகள் சமரசப்படுத்தியும் அதை ஏற்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது. அப்படி அகற்றினால் கலெக்டர் வர வேண்டும். இல்லையென்றால் மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்று தெரிவித்து அப்படியே நின்றனர். இதனால் வேறுவழியின்றி கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு, அதிகாரிகள் தகவல் அளித்து விட்டு சாலையோரமாக நின்று ெகாண்டனர்.

இதையடுத்து அங்கு பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், செயல் அலுவலர் அர்ச்சுனன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் விஜயா மற்றும் அலுவலர்கள் அங்குள்ள மண்டபம் ஒன்றில் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் அரசு அனுமதித்த இடத்தை தாண்டி யாரும் வரக்கூடாது.

சாலையின் ஒருபுறம் மட்டுமே கடைகளை வைக்க வேண்டும் என்ற அதிகாரிகளின் நிபந்தனைகளை வியாபாரிகள் ஏற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பதற்றமான சூழ்நிலை நிலவியது.

Related Stories: