×

திருவெண்ணெய்நல்லூர் அருகே 12ம் நூற்றாண்டு மலைய மன்னன் சிற்பம் கண்டுபிடிப்பு

திருவெண்ணெய்நல்லூர் : விழுப்புரம்  மாவட்டம்  திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது மாரங்கியூர் கிராமம். இங்கு  தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பர்வதவர்த்தினி  சமேத ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைப்பு  பணிகள் தற்போது நடந்து வருகிறது. விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும்  வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் இப்பகுதியில் நேற்று (திங்கள்)  ஆய்வு செய்தார். அப்போது கி.பி.12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மலைய மன்னரின்  சிற்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி செங்குட்டுவன் கூறுகையில், மாரங்கியூர்  கிராமத்தில் இருக்கும் சிவாலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு  பல்லவர் மற்றும் சோழர் கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.  கடந்த சில  ஆண்டுகளாக இக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில்  ராமலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள சிற்பங்கள் திங்களன்று ஆய்வு  செய்யப்பட்டன.

இதில் சுமார் 2 அடி உயரமுள்ள சிற்பம் ஒன்று கைகளைக்  கூப்பி வணங்கிய நிலையில் காணப்படுகிறது. இந்தச் சிற்பம் சாமி சிலை  (அனுமன்?) என வணங்கப்பட்டு வருகிறதுஆனால் இது மன்னர் ஒருவரின் சிற்பம்  ஆகும். கிளியூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் குலோத்துங்கச்  சோழ சேதிராயர். இவரது மகன் எதிரிலி சோழ வாண குலராயன். வாணகப்பாடி நாட்டின்  தலைவராக விளங்கியவர்.

இவர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் இருக்கும்  சிவாலயங்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்திருக்கிறார். அதில்  குறிப்பிடத்தக்கது மாரங்கியூரில் இருக்கும் சிவாலயம். இந்த ஆலயத்திற்கு  தனது ஆட்சிக் காலத்தில் (கி.பி.1136) நிலங்களை தானமாக வழங்கி அவற்றிற்கு  வரி விலக்கும் செய்திருக்கிறார். மேலும் அம்மனின் திருமேனியையும் நிறுவி  இருக்கிறார். இத்தகவல்களை இக்கோயிலில் இருக்கும்  குலோத்துங்க சோழன் காலக்  கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் காரணத்தால் மேற்கண்ட  மன்னரான எதிரிலி சோழ வாண குலராயன்  உருவச் சிலை கோயில் வளாகத்தில்  நிறுவப்பட்டு இருக்கிறது. தலையில் நீண்ட கேசம். காது, கழுத்து, கைகளில்  அணிகலன்கள். இடுப்பில் வாள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.  கள்ளக்குறிச்சி  மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நெய்வனை கிராமத்தில் இருந்த மலைய  மன்னர்களின் சிற்பங்களை இந்தச் சிற்பம் ஒத்திருக்கிறது. கி.பி.12 ம்  நூற்றாண்டைச் சேர்ந்த மன்னரின் சிற்பத்தை உரிய முறையில் பாதுக்காக்க  வேண்டும் என கிராம மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார். ஆய்வின்போது விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்புப் படை அகிலன், வழக்கறிஞர் சாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Tiruvennainallur , Thiruvenneynallur : Marangiyur village is near Thiruvenneynallur in Villupuram district. Here on the banks of Tenpenna River
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்