வேகத்தடை இல்லாததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரே அடிக்கடி விபத்து-மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலை பகுதியில் கள்ளக்குறிச்சி அரசு  மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் புறநோயாளிகள்,  உள்நோயாளிகள் என தினந்தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்கு வந்து  செல்கின்றனர். மேலும் பெண்கள் பிரசவத்திற்கும், அவசர சிகிச்சைக்கும் இந்த  மருத்துவமனைக்கு இரவு, பகல் நேரங்களில் அதிகப்படியான மக்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வரும் நோயாளிகளுக்கு அவரது உறவினர்கள் மருத்துவமனை எதிரில் உள்ள கடைகளில்,  பால், டீ, பழங்கள், உணவு உள்ளிட்டவை வாங்குவதற்கு இருவழி சாலையை கடந்து  செல்ல வேண்டும்.

மேலும் பேருந்தில் இருந்து இறங்கிய நோயாளிகள்,  முதியவர்கள், குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்ல சாலையை கடந்துதான் செல்ல  வேண்டும். அப்போது இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு  சக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் சாலையை கடக்கும்போது அடிக்கடி  விபத்துகள் ஏற்படுகின்றன.

இதனால் இந்த சாலை பகுதியில் பொதுமக்களுக்கு  தொடர்ந்து பாதுகாப்பற்ற நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த  மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கூட சாலையை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பகுதியில் வாகனங்கள் மெதுவாக  செல்லும் வகையில், மருத்துவமனை எதிரே இருபுறங்களிலும் வேகதடை அமைக்க மாவட்ட  நிர்வாகம் மற்றும் கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: