×

பயிர் காப்பீடு திட்டம் மூலம் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்-குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலை : பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து, பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.திருவண்ணாமலை தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், திருவண்ணாமலை பிடிஓ அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. ஆர்டிஓ மந்தாகினி தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் குறைகள் விபரம்:பயிர் காப்பீடு திட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சேர்ந்துள்ளனர். ஆனாலும், பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு முறையாக இழப்பீடு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஏற்கனவே முறையிட்டோம். எனவே, விடுபட்ட விவசாயிகளிடம் மனுக்களை பெற முகாம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், அந்த முகாம்கள் முறையாக நடைபெறவில்லை.

எனவே, பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து, பயிர் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். பருவமழையை முன்னிட்டு ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.விவசாய பயன்பாட்டுக்கு போர்வெல் அமைக்க மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் இருந்தது. ஆனால், அத்திட்டத்தின் கீழ் சமீப காலமாக கடன் வழங்க மறுக்கின்றனர். நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பதாக தெரிவிக்கின்றனர். கிணறு வெட்டி பாசனம் செய்ய முடியாத விவசாயிகளுக்கு, போர்வெல் அமைக்க மானியத்துடன் கடன் வழங்க வேண்டும்.

குறைதீர்வு கூட்டங்களில் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் பி.பர்வின் பானு தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் க.சந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், கரும்பு நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விதைகள் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். நந்தன் கால்வாயில் செல்லும் நீரை பம்பு மூலம் விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அகரம் ஏரி தண்ணீர் செல்லும் கால்வாய் சரி செய்ய வேண்டும்.

ஏரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில், தாசில்தார் க.சக்கரை, தனி தாசில்தார் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) பா.காந்திமதி, விவசாய சங்க தலைவர் அகரம் பழனிசாமி, ஆத்மா குழு தலைவர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.போளூர்: போளூர் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சவீதா தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர் ராமு, வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.பாபு முன்னிலை வகித்தனர்.  உதவி தோட்டக்கலை அலுவலர் சுதாகர் வரவேற்றார்.

கூட்டத்தில், விவசாயிகள் கூறுகையில், பிரதமர் கிசான் திட்ட நிதிஉதவி கிடைப்பதில் குளறுபடிகளை தடுக்க வேண்டும். வெள்ளூர் கிராமத்தில் ஆற்று கால்வாய், ஏரிக்கால்வாய்களை தூர்வார வேண்டும். போளூர் மார்க்கெட் கமிட்டியில் வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு சுங்கவரி வசூல் செய்வதை தடுக்க வேண்டும்.
ஏரிக்கரைகளில் தேவையற்ற முள் மரங்களை அகற்றிவிட்டு பயனுள்ள மரக்கன்றுகளை நட வனத்துறை முன்வர வேண்டும். சேதமாகும் தோட்டக்கலை பயிர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர், அதிகாரிகள் கூறியதாவது: நெல் விவசாயிகளிடம் சுங்கவரி வசூலிக்கும் பிரச்னை குறித்து கலெக்டரின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யானை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தினால் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால், குரங்கு சேதப்படுத்தினால் நிவாரணம் கிடைக்காது. குரங்குகளை பிடித்து காட்டில் விடுவதற்கு வனத்துறை தேவையான ஏற்பாடு செய்யும் என்றனர்.

இதில், வட்ட வழங்கல் அலுவலர் தேவி, துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி, வட்ட சார்ஆய்வாளர் சரவணன், வனவர் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை களஅலுவலர் உமாபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஆரணி: ஆரணி பிடிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குநர் புஷ்பா தலைமையில் நடந்தது.
தோட்டக்கலை உதவி இயக்குநர் கவுசிகா, தாசில்தார் ஜெகதீசன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் செல்லதுரை வரவேற்றார். ஆர்டிஓ தனலட்சுமி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கூட்டத்தில், விவசாயிகள் கூறுகையில், `பையூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டியுள்ள கல்வெர்ட்களை அகற்ற வேண்டும். கொசப்பாளையம் பகுதியில் நெற்பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை பிடித்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகங்களில் விதைகள் இருப்பு விவர பட்டியல் வைக்க வேண்டும். கமண்டல நாகநதி, செய்யாற்று படுகையில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

தொடர்ந்து, ஆர்டிஓ தனலட்சுமி  விவசாயிகளிடம் கோரிக்கை மனு பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில், வேளாண்மை அலுவலர்கள் கீதா, பவித்ராதேவி, விவசாய சங்க தலைவர் ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvannamalai: Registration for crop insurance scheme and steps to be taken to get compensation for all the affected farmers
× RELATED பிரதமர் மோடியின் ரத்த அணுக்களில்...