×

வேலூர் அடுத்த பெருமுகையில் பாலாற்றில் அளவுக்கு மீறி மணல் அள்ளுவதாக கிராம மக்கள் போராட்டம்-குவாரியை மூட கோரிக்கை; போலீசார் சமரசம்

வேலூர் : வேலூர் அடுத்த பெருமுகை பாலாற்றில் அளவுக்கு மீறி மணல் அள்ளுவதாக எதிர்ப்பு தெரிவித்து, மணல்குவாரியை மூட கோரிக்கை வைத்து கிராம மக்கள் நேற்று ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். காட்பாடி அடுத்த அரும்பருதி பாலாற்றில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மணல் குவாரிக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது. அங்கிருந்து டிராக்டர்கள் மூலம் பெருமுகை பகுதியில் மணல் விற்பனை நிலையத்திற்கு கொண்டு வந்து சேமித்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு யூனிட் மணல் ₹3,150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்களுக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்களுக்கும் மணல் விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 100 யூனிட் மட்டுமே மணல் அள்ள அனுமதி உண்டு. மணலை பொக்லைன், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அள்ளக்கூடாது. கைகளால் மட்டுமே அள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. மணல் விற்பனை முறைகேடுகளை தடுக்க மணல் குவாரி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் அனுமதி அளிக்கப்பட்ட இடத்தை விட்டு, பெருமுகை ஊராட்சியையொட்டிய பாலாற்றில் விதிமீறி மணல் அள்ளப்படுவதாக வீடியோ கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலாற்றில் அளவுக்கு மீறி மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது. எனவே உடனடியாக மணல் குவாரியை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் பெருமுகை, வெங்கடாபுரம், பிள்ளையார்குப்பம் கிராம பொதுமக்கள் திரண்டு பாலாற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மணல் அள்ளுபவர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் லெனில் பிரான்சிஸ் மற்றும் அதிகாரிகள், போலீசார் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து பெருமுகை கிராம மக்கள் கூறுகையில், ‘பொதுப்பணித்துறை அனுமதி அளித்த அரும்பருதி பாலாற்றை விட்டு தற்போது பெருமுகை கிராமத்தை ஒட்டியுள்ள பாலாற்றில் மணல் அள்ளுகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் மணல் கொண்டு செல்லப்படுகிறது. அத்துடன் மணல் கொள்ளையர்கள் எங்கள் சுடுகாட்டையும் விட்டுவைக்காமல் சுரண்டி மணலை அள்ளி வருகின்றனர்.

 இதனால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும் நிலையாக உள்ளது. விதிகளை மீறி இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் குவாரியை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

பொதுப்பணித்துறை விளக்கம்

இதுகுறித்து பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு (மணல் குவாரி) லெனின் பிரான்சிஸிடம் கேட்டபோது, ‘அனுமதிக்கப்பட்ட அளவை மீறி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்படுவதில்லை. கைகளால் மட்டுமே அள்ளப்படுகிறது. மணல் வாகனங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் வாகனங்கள் மட்டுமே குவாரியில் அனுமதிக்கப்படுகின்றன. விரைவில் மாட்டு வண்டிகள் மூலமும் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும்’ என்றார்.

Tags : perumgarh ,Vellore , Vellore: Vellore is protesting excessive sand extraction in the next Perumugai Bala and demanding the closure of the sand quarry.
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...