சிதம்பரம் நடராஜர் கோயில், மன்னர்கள் கட்டி எழுப்பியது, தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

காஞ்சிபுரம்: சிதம்பரம் நடராஜர் கோயில், மன்னர்கள் கட்டி எழுப்பியது, தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று சென்னை, கீழ்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாணவ, மாணவியருக்கான புதிதாக கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டதோடு, தற்போதைய பள்ளி கட்டிடங்களில் செய்யப்பட வேண்டிய மராமத்துப் பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நடத்தப்பப்படுகின்ற பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட வேண்டுமெனவும், அதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டுமெனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்கள். அதனடிப்படையில் நானும், துறை செயலாளர், ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர்கள் துறையின் மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த வாரம் இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட போது அத்திருக்கோயில் மூலம் நடத்தப்படும் என்.டி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டோம்.

கடந்த நிதியாண்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுகின்ற பள்ளிகள், கல்லூரிகளுக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தந்திட சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இந்த இடத்தில் கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளையின் பள்ளிக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. 1998 ஆம் ஆண்டு அந்த குத்தகை காலம் முடிந்த பிறகும் வாடகைத் தொகை நிலுவையில் இருந்ததால் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி 2021 ஆம் ஆண்டு இங்கு நடைபெற்று வந்த பள்ளியை அதன் அறக்கட்டளை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தது.

இது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் இந்த பள்ளியை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை ஏற்று நடத்த வேண்டும் என மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டார். அந்த வகையில் முதலாம் ஆண்டில் 550 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு 850 ஆக உயர்ந்து தற்போது 1180 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அடுத்த ஆண்டில் கூடுதலாக 300 மாணவர்கள் புதிதாக சேர்வார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்பள்ளியின் மாணவர்களுக்காக ரூபாய் 13 கோடி செலவில் 42 அறைகள் கொண்ட கட்டடம் கட்டப்படவுள்ளது. அதில் 32 வகுப்பறை கட்டிடங்கள், 4 ஆய்வுக்கூடங்கள், ஒரு நூலகம், 4 ஆசிரியர்கள் அறைகள், ஒரு கணினி அறை அமைக்கப்படுகிறது.

தற்போது இந்த பள்ளியில் 40 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் கூடுதலாக பகுதி நேர ஆசிரியர்களாக 7 ஆசிரியர்களையும், 17 ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் நியமித்திருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக 64 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை இந்த பள்ளியை ஏற்றுக்கொண்ட பிறகு ரூ.1.47 கோடி செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதியானது வறுமைக் கோட்டிற்கு கீழும், நடுத்தர மக்களும் அதிகமாக மக்கள் வசிக்கின்ற பகுதி என்பதால் கல்விக் கட்டணத்தையும் வெகுவாக குறைத்துள்ளதோடு, இரண்டு செட்டு சீருடைகள், புத்தகப்பை வழங்கி இருக்கின்றோம். தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற 27 பள்ளிகளில் பயின்று வரும் 13 ஆயிரத்து 863  மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக இதுபோன்ற பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றோம்.

கேள்வி : அறநிலையத்துறையின் மூலம் தொடங்கப்படவுள்ள கல்லூரிகளின் தற்போதய நிலை மற்றும் புதிய பள்ளிகள் தொடங்கப்படுமா?

பதில் : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என  அறிவிப்பு கொடுத்திருந்தோம். அதில் 4 கல்லூரிகளை தற்போது செயல்பாட்டில் உள்ளது. மீதம் 6 கல்லூரிகளை தொடங்குவதற்கு அந்தந்த திருக்கோயில்களில் அறங்காவலர்களை நியமித்து,  கல்லூரி கல்வி இயக்ககத்தில் அனுமதி பெற்று, நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்து மற்ற கல்லூரிகளை தொடங்கலாம் என நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்குண்டான சட்டப்படியான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு இருக்கின்றோம். ஏற்கனவே தொடங்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்ற 3 கல்லூரிகளுக்கும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் கல்லூரிக்கு அறங்காவலர்களை நியமிக்க இருக்கின்றோம். புதிய பள்ளிக்கூடங்களை ஏற்படுத்துகின்ற அவசியம் தற்போது ஏழவில்லை.

கேள்வி : சிதம்பரம் கோயில் தீட்சதர்கள் அறநிலையத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளது குறித்தும்

பதில் : நீதிமன்ற அவமதிப்பு  வழக்கு தொடர யாரும் தடையாகவே இல்லை. இந்து சமய அறநிலைத்துறை செயல்பாடுகள் தவறு என்றால் அவர்கள் தாராளமாக நீதிமன்றத்திற்கு செல்லலாம். எங்களுடைய ஒவ்வொரு அடியையும் அளந்து ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றோம். தவறுகள் எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கின்ற, சுட்டிக்காட்டுகின்ற கடமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உண்டு. சிதம்பரம் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல, மன்னர்களால், நம்மை ஆண்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோயில். அந்த திருக்கோயில் வருகின்ற வருமானங்களை முறையாக கணக்கு கேட்கின்ற பொழுது கணக்கு காட்டுவது தீட்சிதர்களின் கடமை. அதேபோல் நிர்வாகத்தில் இருக்கின்ற குளறுபடிகளை கேள்விகளாக கேட்கின்ற போது அதற்கு பதில் சொல்வதும் அவருடைய கடமை.

திருக்கோயில் உள்ளே அவர்கள் இஷ்டத்திற்கு கட்டிடங்களை எழுப்பி இருக்கின்றார்கள். இப்ப எழுப்பப்பட்ட கட்டிடங்கள் நிலை குறித்து கேள்வி கேட்பது இந்து சமய அறநிலையத்துறையின் கடமையாகும். அதேபோல அத்திருக்கோயிலுக்கு மன்னர்களால் சேர்த்து வைக்கப்பட்ட, வழங்கப்பட்ட சொத்துக்கள், நகைகள், விலைமதிப்பற்ற பொருட்களுடைய நிலையை ஆய்வு செய்வது இந்து சமய அறநிலையத்துறையின் கடமை. இதற்கு முழுவதும் ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. ஆகவே எங்களுடைய பணி நியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அவர்கள் நீதிமன்ற  அவமதிப்பு தொடர்ந்தால் அதற்கான விளக்கத்தை நாங்களும் நீதிமன்றத்தில் எடுத்து சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம். இந்து அறநிலையத்துறையை பொறுத்தளவில் எந்த விதமான அத்துமீறலும், அதிகாரம் செய்யவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் நியாயத்தின்படி நடக்கச் சொல்லி தான் உத்தரவிட்டிருக்கின்றார். ஆகவே நியாயத்தை நிலை நாட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலைத்துறை மேற்கொள்ளும்.

கேள்வி : சிதம்பரம் கோயில் அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமான இடமா?

பதில் : அந்த இடத்தை பொறுத்தளவில்  முழுக்க அரசினுடைய இடம். இருந்தாலும் தற்போது இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரை கொண்ட  ஒரு குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கையும் தந்திருக்கின்றது. தற்போது நகைகள்  சரி பார்க்கின்ற பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆகவே விசாரணை தொடர்வதால் முழு விளக்கத்தையும் அளிப்பது ஏற்புடையதாக இருக்காது இருந்தாலும் அந்த திருக்கோயில் இடம் அரசுக்கு சொந்தமான இடம்.

கேள்வி : இந்து சமய அறநிலையத்துறையும், அதன் அமைச்சரும் எல்லையைத் தாண்டி செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

பதில் : நாங்கள் எல்லையைத் தாண்டி வரவில்லை. அப்படி இருந்து  சுட்டி காட்டினால் தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறோம். குறைகள் இருந்தால் அதை நிறைவு செய்ய தயாராக இருக்கின்றோம். எல்லை தாண்டி எப்பொழுதுமே நாங்கள் செல்வதற்கு எங்களுடைய முதலமைச்சர் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்ற மாநிலம். சட்டத்திற்குட்பட்டு தான் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.

கேள்வி : திருக்கோயில்களை இந்துக்கள் தான் நிர்வகிக்க வேண்டும். அரசு நிர்வகிக்கக் கூடாது என இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளது குறித்து?

பதில் :  இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றுகின்ற அனைவருமே இந்துக்கள் தான்.  அப்படி என்றால் இந்துக்கள் தான் திருக்கோயில்களை  நிர்வகிக்கிறார்கள் இதில் கேள்வி எழுப்ப அதற்கு என்ன இருக்கின்றது. அவர்களுக்கு எந்த பொருளும் கிடைக்கவில்லை தூக்கி வீசுவதற்கு ஆதலால் ஏதாவது ஒன்றை இப்படி சம்பந்தமே இல்லாமல் அதில் எள்ளளவும் நியாயம் இல்லாமல் கருத்துக்களை கூறுவது வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களை புனரமைப்பது ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் கழித்தும் திருப்பணி நடைபெறாத திருக்கோயில்களில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வது, ஏற்கனவே கும்பாபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டு காலம் தொடர்ந்து திருப்பணிகள் நிறைவேறாமல் இருக்கின்ற திருக்கோயில்களை புனரமைப்பது, திருக்கோயில்களில் ஓடாமல்  இருக்கின்ற தங்க தேர்களை ஓட வைப்பது, திறக்காத வாயில் கதவுகளை திறக்க வைப்பது போன்றவைதான் இத்துறையின் பயணமாகும். திருக்கோயில்களில் பணியாற்றுகின்ற அச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் உரிமைகளை பாதுகாப்பதைதான் தனது பயணத்தில் மேற்கொண்டு இருக்கிறோம்.  இதை எங்களுடைய கடமைகளாக செய்கிறோமே தவிர அரசியலுக்கு எள்ளளவும் இதற்கு இடமில்லை.

கேள்வி : இந்து சமய அறநிலையத்துறையில் இதுவரை எவ்வளவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன?

பதில் : இதுவரை சுமார் 3700 கோடி ரூபாய் அளவிற்கு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த மீட்பு நடவடிக்கை தொடரும். துறை சார்ந்த கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆணையர் அவர்கள் இது குறித்து அனைத்து மண்டல இணை ஆணையர்களோடு ஆய்வு செய்கிறார்கள். இறைசொத்து இறைவனுக்கே என்பதில் இந்த ஆட்சி உறுதியாக இருக்கின்றது.

ஆகவே ஆக்கிரமிப்பாளர்களை களைவதோடு மட்டுமல்லாமல் மீட்கப்படுகின்ற இடங்களை மீண்டும் வாடகைக்கு விட்டு திருக்கோயிலுக்கு உண்டான வருமானத்தை பெருக்குகின்ற வகையில் இந்து சமய நல்லதுறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வாடகை வசூல் நிலுவையில் இருந்த ரூபாய் 200 கோடி இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு வசூலிக்கப்பட்டிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக முதலமைச்சர் தலைமையிலான அரசில் இந்து சமய அறநிலைத்துறையின் நிர்வாகம் புதுப்பொலிவுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் இரா.வான்மதி, உதவி ஆணையர்கள், பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: