டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் (நவ. 8) நிறைவடைகிறது. நேற்று குருநானக் ஜெயந்தி என்பதால், உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாகும். அதனால் கடந்த 7ம் தேதி முறைப்படி ஓய்வு பெற்றார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியில் நீடிப்பார். டி.ஒய்.சந்திரசூட் நவம்பர் 11, 1959ல் பிறந்தவர். கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் சந்திரசூட். சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி.சந்திரசூட்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முன் மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார் டி.ஒய்.சந்திரசூட்.