×

இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா.சபை எச்சரிக்கை: உணவின்றி தவிப்போர் எண்ணிக்கை 34 லட்சமாக உயர்வு

கொழும்பு: இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த இலங்கை மக்களின் போராட்டம் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகினர். தற்போது அதிபராக உள்ள ரணில் அடக்குமுறையை கையாள்வதாக குற்றச்சாட்டி தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டில் 2 கோடி 20 லட்சம் மக்கள் தொகையில் 17 லட்சம் பேர் உணவின்றி தவிப்பதாக கடந்த ஜூன் மாதம் ஐ.நா. சார்ந்த அமைப்புகள் கணக்கீடு செய்திருந்தன. அவர்களுக்கு உதவ 642 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக அந்த அமைப்புகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறுவடை பாதிப்பு, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் உணவின்றி தவிப்போர் எண்ணிக்கை இரட்டிப்பாகி 34 லட்சமாக உயர்ந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு உதவ மேலும் 570 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 13.1% -ஆக இருந்த இலங்கையின் ஏழ்மை விகிதம், இந்த ஆண்டு 25.6% அதிகரித்துள்ளதாகவும் ஐ.நா. அமைப்புகளின்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : UN Council ,Sri Lanka , Sri Lanka, food, famine, risk, UN, number, rise
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்