×

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசு தலைவரிடம் திமுக, கூட்டணி கட்சிகள் மனு..!

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசு தலைவரிடம் திமுக, கூட்டணி கட்சிகள் மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை வெளிப்படுத்தும் வகையில் பேசியதாகவும் புகார் எழுந்தது. மேலும் திருக்குறளில் ஆன்மிகம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் பேசியிருந்தார். இதற்க்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசு தலைவரிடம் திமுக, கூட்டணி கட்சிகள் மனு அளித்துள்ளனர். அதில்; எங்கள் மாநிலம் மற்றும் மாநில மக்கள் தொடர்பான அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கவனத்தைக் கோரி, கீழே கையொப்பமிட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கடிதத்தை அனுப்புகிறோம்.

2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாகத் தெரிவிக்கிறது.  எனினும், பெயரளவில் மட்டுமே மாநிலத்தின் தலைவரான ஆளுநர், தனது அதிகாரத்தை மாநில முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார். ஏனென்றால் ஆளுநர் மாநிலத்தில் அரசியலமைப்புக் கருவியின் ஓர் அச்சாணி ஆவார்.

3. அரசியல் நிர்ணய அவை விவாதங்களின்போது, நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர்கள், ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கும், பொது மக்களுக்கும் ஒரு “வழிகாட்டியாக, தத்துவாசானாக, நண்பராக” விளங்க வேண்டும் என்றே கருதினர். முக்கியமான அரசமைப்புச் சட்டப் பணிகளைச் செய்ய வேண்டிய ஆளுநரானவர் தனது கடமையில் ஒருசார்பற்றவராகவும், நேர்மையானவராகவும், மிகச் சரியானவராகவும் இருக்க வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உயிரோட்டம் என்பது மக்களாட்சிதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிறுவத்தான் நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் காலனிய ஆட்சியாளர்களை எதிர்த்துத் தங்கள் உயிரை ஈந்தார்கள்.

4. ஆளுநராக இருப்பவர் அரசியலமைப்பின்பாலும் அதுகுறித்து நிற்கும் மதிப்புகளின்பாலும் முழு நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. நமது அரசியலமைப்பின் மதிப்புகள் முகவுரையில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. அதாவது, இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்பதாகும். அதில் கூறப்பட்டுள்ளவற்றுள் ஏதாவது ஒன்றில் நம்பிக்கையில்லாத ஓர் ஆளுநர் அத்தகைய அரசியலமைப்பின் பெயரிலான பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் ஆகிறார். மேலும், அரசியல் சார்புத்தன்மை கொண்டவராக ஒரு ஆளுநர் மாறுவாரேயானால் - அந்தப் பதவியில் அவர் தொடரும் தகுதியை இழந்து விடுகிறார்.

5. அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் மாநிலத்தின் பெயரளவிலான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை அவரது பெயரிலேயே முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கொள்கையளவிலும் செயல்பாட்டளவிலும் எதிர்ப்பது அரசமைப்புச் சட்டத்தை மீறியதும் மக்களாட்சிக்குச் சாவுமணி அடிப்பதுமான செயலாகும். அரசமைப்புச் சட்டத்தை வகுத்த அறிஞர்கள் ஒரு நாளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கையுடன் ஓர் ஆளுநர் இப்படி வெளிப்படையாக முரண்படுவதையோ, சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றித் தாமதப்படுத்துவதையோ, மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதையோ கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அத்தகைய சூழலை எதேச்சாதிகாரம் என்றே குறிப்பிட முடியும். ஆளுநரின் செயலால் அத்தகைய ஒரு சூழல்தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.

6. தாங்கள் நன்கறிந்தபடியே, 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் - தமிழ்நாட்டை சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுப் பாதையில் முன்னகர்த்திச் செல்வதற்கான ஆட்சியுரிமையை மாநில மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கினார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு இரவும் பகலும் மக்களுக்காக உழைத்து, மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

7. எனினும், தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றி வரும் பணிகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாகப் பொதுவெளியில் முரண்படுவது, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கியமான சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையின்றிக் காலந்தாழ்த்துவது (விவரங்கள் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன) என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருவது பற்றிய எங்கள் அதிருப்தியை அவருக்கான உச்சபட்ச மரியாதையுடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் பல்வேறு சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தேவையின்றிக் காலந்தாழ்த்துகிறார் என்று குறிப்பிட வேதனையடைகிறோம். இது மாநில நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை அலுவல்களில் தலையிடுவதாக இருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன் மக்களுக்காகப் பணியாற்றுவதைத் தடுப்பதாக இருக்கிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்.

8. நமது அரசமைப்புச் சட்ட நடைமுறைப்படி, அமைச்சரவை அல்லது சட்டப்பேரவையின் முடிவுக்கு மேலான அதிகாரம் உள்ளவராக ஓர் ஆளுநர் இருக்க முடியாது என்பது மிகத் தெளிவு. ஒரு சட்டவரைவின் தேவை அல்லது அவசியம் குறித்து ஆளுநர் ஆராய இயலாது. அது முழுவதும் சட்ட வரைவின் தேவை குறித்து விரிவாக விவாதிக்கும் சட்டப்பேரவையின் தனியுரிமையாகும். சட்டவரைவு நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டவுடன், அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்டு செயல்படும் ஆளுநர் அதனை மாநில மக்களின் முடிவாகக் கருதியே செயலாற்ற வேண்டும்.

9. எங்கள் மாநிலத்தில் ஆளுநர் தமது முதன்மையான பணியை ஆற்றுவதில்லை. கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான 97-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2011 ஆனது மாண்பமை உச்சநீதிமன்றத்தால் 20-07-2021 அன்று செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இத்தீர்ப்பினைத் தொடர்ந்து, நம் நாட்டின் சட்டத்திற்கிணங்க, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் 1983-ஐக் கொண்டுவரும் வகையில், 7.1.2022 அன்று சட்டவரைவு எண்:11-ஐ நிறைவேற்றி ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களின் ஒப்புதலுக்காகச் சட்டப்பேரவை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 10 மாதங்களாக, இச்சட்டவரைவு ஆளுநர் அலுவலகத்தில் பரிசீலிக்கப்படாமல் சிதைவுற்று வருகிறது. இதேபோல, 2021-ஆம் ஆண்டு சட்ட முன்வரைவு எண் 43-ஆன தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் (நீட் விலக்கு சட்டவரைவு) தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக 13.9.2021 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அரசியல் சட்டப்பிரிவு (200/201)-இன்படி அதனை மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்குப் பதிலாக, பலமாத காலம் காலந்தாழ்த்தினார். இது தொடர்பாக, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு முன் குடியரசுத் தலைவராக இருந்தவரை 28.12.2021 அன்று சந்தித்து ஒரு கோரிக்கை மனுவையும் வழங்கினோம். இதன் பின்னர், 5.1.2022 அன்று மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சரிடமும் இது தொடர்பாக மற்றொரு கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது. இதன் பின்னர், திரு. ஆர்.என்.ரவி அவர்கள் மேற்கூறப்பட்ட சட்ட வரைவை மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் (ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதால்), மாண்புமிகு குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைத் தானே கையில் எடுத்துக் கொண்டு, சட்டப்பேரவையின் முடிவை கேள்விக்குள்ளாக்கி, சட்ட வரைவைத் சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார். இது ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறிய செயலாகும். ஆளுநரின் இத்தகைய நடத்தையால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டிய சூழல் உருவாகி- நீட் விலக்கு சட்டவரைவு மீண்டும் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநிலச் சட்டப்பேரவை வெளிப்படுத்தும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதையே இது காட்டுகிறது. இத்தகைய செயல்பாடுகள் ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல.

10. பல்வேறு மதங்கள், மொழிகள், சாதிகளைச் சார்ந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் சொர்க்கமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களோ கெடுவாய்ப்பாக, இந்நாட்டின் மதச்சார்பின்மைக் கருத்தியலில் தனது நம்பிக்கையின்மையை பொதுவெளியில் தெரிவிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, அடிக்கடி சமுதாயத்தில் பிளவுபடுத்தும் பேச்சுகளில் ஈடுபடுகிறார். இத்தேசத்தின் மதச்சார்பின்மைப் பண்புகளில் மாறாப்பற்று கொண்ட எங்கள் அரசுக்கு இது பெரும் சங்கடமாக உள்ளது. தாம் வகிக்கும் ஆளுநர் பொறுப்புக்குச் சிறிதும் பொருத்தமற்ற வகையில், அவர் ஆபத்தான, பிளவுபடுத்தும் நோக்கிலான, மதரீதியான கருத்துகளைப் பொதுவெளியில் பேசி வருகிறார். மக்கள் மனங்களில் வெறுப்பைத் தூண்டி, சமூகப் பதற்றத்தை உண்டுபண்ணும் நோக்கத்துடன் திட்டமிட்டு அவரது பேச்சுகள் அமைகின்றன.

அண்மையில் அவர், “உலகின் பிற நாடுகளைப் போலவே இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்தே உள்ளது” என்று ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்பையே அவமதிப்பதாகும். இந்தியாவானது தனது அரசியலமைப்பையும் சட்டங்களையும் சார்ந்துள்ளதே தவிர எம்மதத்தையும் சார்ந்து இல்லை. கடந்த காலங்களிலும், ஆளுநர் அவர்கள் சனாதன தருமத்தைப் போற்றுவது, தமிழிலக்கியத்தின் அணியான திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது, திராவிட மரபையும் தமிழ்ப் பெருமையையும் விமர்சிப்பது என இதேபோல மதரீதியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழர்களின் உணர்வுகளையும், பெருமையையும் ஆளுநரின் இத்தகைய பேச்சுகள் புண்படுத்தியுள்ளன.

11. ஆளுநரின் சிந்தனையானது அரசியல் விருப்பு வெறுப்புகள், கட்சி சார்பு அரசியல் அல்லது தனது பதவிக்காலம் முடிந்த பின் பெறக்கூடிய எதிர்கால பதவிகள் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். மக்களின் நலனைக் குறித்தே அவரது கவனம் இருக்கவேண்டும். அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் முடிவுகளுக்கு அவர் இணங்கிச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என்று முடிவுசெய்ய திரு. ரவி அவர்கள் தமிழ்நாட்டில் தேர்தல்கள் எதிலும் வெற்றி பெறவில்லை என்பதை மறந்துவிடுகிறார்.

12. சர்க்காரியா ஆணையம் தனது அறிக்கையில் ஆற்றல், நேர்மை, நடுநிலைமை மற்றும் அரசியல் நற்பண்புகளை வெளிப்படுத்தும் ஆளுநர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அண்மைக் காலங்களில், ஒன்றிய அரசில் ஆளுங்கட்சியாக உள்ளவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கும்/இருந்த ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்குக் கைம்மாறாக ஆளுநர் பதவி தரப்படுகிறது. இவர்களுக்கு ஆளுநர் பொறுப்பை வகிப்பதற்கான அடிப்படை அறிவோ, நேர்மையோ, நடுநிலைத்தன்மையோ இல்லை. இவர்கள் அரசுக்கும் மாநில மக்களுக்கும் சங்கடமாக உருவெடுக்கிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி ஆட்சி செய்யாத மாநில அரசுகளைத் தாக்கும் வாய்ப்புக்காகத் துடிக்கும் ஒன்றிய அரசின் முகவர்களாக மட்டுமே மாநிலத் தலைநகர்களில் அமர்ந்துகொண்டிருப்பவர்கள் என்பதான ஆளுநர்களின் பிம்பம் நமது கூட்டுறவுக் கூட்டாட்சியியலைச் உருச்சிதைத்து, மக்களாட்சியை அழித்துவிடும். இத்தகைய சீர்க்கேட்டின் சிறந்த எடுத்துக்காட்டாகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் விளங்குகிறார்.

13. திரு. ஆர்.என். ரவி அவர்கள், “அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பேன். தமிழ்நாட்டு மக்களின் சேவைக்காகவும் நல்வாழ்க்கைக்காகவும் என்னை அர்ப்பணித்துக்கொள்வேன்” என்று அரசியல் சட்டப்பிரிவு 159-ன் கீழ் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்தை ஐயத்திற்கிடமின்றி மீறிவிட்டார். எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாக, அவர் மதவெறுப்பைத் தூண்டி- மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். சட்டத்தினால் நிறுவப்பட்ட அரசின்பால் வெறுப்பையும் நம்பிக்கையின்மையையும் தூண்டும் வகையில் அல்லது தூண்ட முயலும் வகையில் அவரது அறிக்கைகள் இருப்பதால் அவை தேசத்துரோகமானவை என்றும் சிலர் கருதக்கூடும். தனது நடத்தையாலும் செயல்களாலும், திரு. ஆர்.என்.ரவி அவர்கள் அரசியலமைப்பினால் நிறுவப்பட்ட ஆளுநர் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை நிரூபித்துவிட்டார். ஆகவே அப்பொறுப்பிலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

14. அரசியல் சட்டப்பிரிவு 156(1)-இன்படி, “குடியரசுத் தலைவர் அவர்கள் விரும்பும் வரையில்” (During pleasure) ஆளுநர் தனது பதவியில் நீடிப்பார். ஆகவே, தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து திரு. ஆர்.என்.ரவி அவர்களை உடனடியாக நீக்கி, அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காப்பாற்றுமாறு குடியரசுத் தலைவரை  வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.


Tags : Tamil Nadu ,Governor R. N.N. ,President of the Republic , DMK, alliance parties petition to the President demanding the recall of Tamil Nadu Governor RN Ravi..!
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...