திருச்செங்கோட்டில் இருந்து இடைப்பாடி விவசாயிக்கு ரூ.5 லட்சத்திற்கு குழந்தையை விற்க கொண்டுவந்த கும்பல் சிக்கியது: பரபரப்பு தகவல்கள்

சேலம்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை சேலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்ய இருப்பதாக சேலம் மாநகர போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டவுன் மகளிர் போலீசார் சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது குழந்தையுடன் வந்து இறங்கிய 3 பேரை  மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் ஈரோடு எம்.எஸ்.நகரை சேர்ந்த லதா(35), திருச்செங்கோடு குச்சிப்பாளையத்தை சேர்ந்த வளர்மதி(25), அவரது கணவர் மதியழகன்(30) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பிறந்து 4 நாட்களேயான பெண் குழந்தை என்பதால் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு குழந்தைகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் இந்த குழந்தை விற்பனை கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. திருவாரூரைச் சேர்ந்தவர் கஸ்தூரி(25). இவரது கணவர் ராமராஜ். கூலித்தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான கஸ்தூரி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தினமும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதையடுத்து 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, திருச்செங்கோட்டில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு சென்று விட்டார். வெப்படையில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் காயத்ரி வேலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு வேலை செய்த வளர்மதியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இவரும் லதா என்பவரும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில்  ரூ.20 ஆயிரத்துக்கு கரு முட்டை விற்பனை செய்தவர்கள் ஆவர். கருமுட்டை புரோக்கர்களாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் லதாவை சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த அன்பு என்ற விவசாயி தொடர்பு கொண்டு ‘‘தனக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. விரைவில் ஒரு குழந்தையை கொடுங்கள், ரூ.5 லட்சம் கொடுக்கிறேன்’ என கூறியுள்ளார். இதற்கு லதா சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வளர்மதியிடம் குழந்தை இருந்தால் கூறுமாறு லதா கேட்டுள்ளார். இந்நிலையில்தான் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கஸ்தூரிக்கு குழந்தை பிறந்த தகவலை காயத்ரி மூலம் அறிந்து, லதாவிடம் வளர்மதி தெரிவித்துள்ளார்.

அந்த குழந்தையின் புகைப்படத்தை பெற்ற லதா, விவசாயி அன்புவின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பினார். படத்தை பார்த்த அன்பு, குழந்தையுடன் வாருங்கள், ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஏற்கனவே 2 பெண் குழந்தை இருந்ததால், 3வதாக பிறந்த பெண் குழந்தையை கஸ்தூரியும், அவரது சகோதரி காயத்ரியும்  வளர்மதி தம்பதியிடம் கொடுத்துள்ளனர். வளர்மதி, அவரது கணவர் மதியழகன், லதா ஆகியோர் கைக்குழந்தையுடன் சேலம் வந்தனர். அப்போது போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்தனர். தாய் கஸ்தூரி, அவரது சகோதரி காயத்ரியையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: