×

கூவத்தூரில் முதுகில் தட்டி, தவழ்ந்து வந்தவரை இழுத்து முதலமைச்சர் ஆக்கியவரையே விமர்சனம் செய்தவர் எடப்பாடி: நம்பிக்கை துரோகி யார் என மக்களுக்கு தெரியும்: ஓபிஎஸ் ஆவேசம்

சென்னை: கூவத்தூரில் முதுகில் தட்டி, தவழ்ந்து வந்தவரை இழுத்து முதல்வர் ஆக்கியவரையே விமர்சனம் செய்தது யார் என்று எல்லோருக்கும் தெரியும் என்று ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவினர் பலரும் நேற்று முன்தினம் இரவு சந்தித்து சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் கூட்டத்தில் நான் சொல்லாத கருத்துகளை எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அதற்கு என்னுடைய வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எதற்காக தர்மயுத்தம் தொடங்கினேன் என்பது உங்களுக்கு தெரியும். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடியை எதிர்த்து தான் நாங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது வாக்களித்தோம். அதற்கு பிறகு அமைச்சர்களாக இருந்த தங்கமணியும், வேலுமணியும் ஒருநாள் பதற்றத்தோடு என் வீட்டிற்கு வந்தார்கள். டி.டி.வி.தினகரன் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப் போகிறார். திமுகவும், நீங்களும் அந்த தீர்மானத்தை ஆதரித்தால் ஆட்சியே கவிழ்ந்து விடும், காப்பாற்றுங்கள் என்றார்கள்.

அப்போது இருவரும் சொல்வதை ஏற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தோம். அன்றைக்கு நான் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் 5 ஓட்டு வித்தியாசத்தில் எடப்பாடி ஆட்சி காப்பாற்றப்பட்டது. எங்களது நல்ல எண்ணத்தை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளாமல் வாய்க்கு வந்ததை பேசுவது எடப்பாடிக்கு சரியல்ல. அதற்கு பின்னர், பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை செய்து என்னை எப்படியாவது மட்டம் தட்டும் நோக்கத்தோடு எடப்பாடி செயல்பட்டார். அவற்றையெல்லாம் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். அதனை உரிய நேரத்தில் வெளியிடுவேன். அவர் எனக்கு துணை முதல்வர் பதவி தந்ததாக சொல்கிறார்.

அவரை கூவத்தூரில் முதுகில் தட்டி, தவழ்ந்து வந்தவரை இழுத்து, முதலமைச்சர் ஆக்கியவரே சசிகலாதான். அவரை பற்றி இவர் செய்த விமர்சனங்கள் எல்லோருக்கும் தெரியும். நம்பிக்கை துரோகி யார் என்பது இப்போது தமிழக மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி விட்டது. நான் ஜானகி அணியில் இருந்ததாக சொல்கிறீர்கள். உண்மைதான் நான் ஜானகி அணியில் தான் இருந்தேன். அந்த மாளிகைக்கு எம்ஜிஆர் மாளிகை என்று பெயர் வைக்கக்கூட எடப்பாடிக்கு மனம் வரவில்லை. கட்டாயப்படுத்தி தான் அந்த பெயரை நாங்கள் வைத்தோம்.
பொய்யையே மூலதனமாக கொண்டு அரசியல் நடத்தும் எடப்பாடி, அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று சவால் விட்டோம்.

அதற்கு இதுவரை எடப்பாடி எந்த பதிலும் அளிக்கவில்லை. சந்தர்ப்பத்திற்கு தகுந்த மாதிரி பொய் சொல்வதில் தமிழக அரசியல்வாதிகளில் முதன்மையானவர் எடப்பாடி தான் என்பது இதிலிருந்தே தெரியவில்லையா? இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.சி.டி.பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : edapadi ,kowatur ,Chief Minister ,OPS , Criticism, Edappada, Betrayer, People Know, Obsession with OPS
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு