மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையிலிருந்து பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி பேட்டி

சென்னை: பயணிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சென்னையிலிருந்து பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும்  என ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார். சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளை ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ரூ.63,245 கோடி செலவில் 118.9 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெறும்  2ம் கட்ட  மெட்ரோ ரயில் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் மற்றும் அதிகாரிகள், பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: பரந்தூர் விமான நிலையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் துவங்கப்பட உள்ளது. எனவே நிலங்களை கையகப்படுத்துவது குறித்து மாநில அரசுதான் முடிவு செய்யும். பொதுமக்கள், பயணிகள் பயன்பெறும் வகையில் பரந்தூர் விமான நிலையம் வரை நிச்சயமாக மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும்.  தலைநகரில் மட்டுமில்லாமல் இரண்டாம் தலைநகரங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும். தென் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பாஜ கட்சி வரக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெரும். எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம் என்பதை தேர்தல் வெற்றிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.

தாஜ்மஹாலை விட மாமல்லபுரத்துக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்திருப்பதாக கிடைத்திருக்கக் கூடிய தகவல் குறித்து ஆய்வு செய்யப்படும். பின்னர் மாமல்லபுரம் மேம்பாடு குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.வடபழனி மெட்ரோ நிலையத்தில் ஆய்வு செய்த அவர் அங்கிருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சோழிங்நல்லூரில் மகளிர் சுய உதவிக்குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார். அங்கு அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினை பொருட்கள் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டார்.

Related Stories: