×

10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பு ‘சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்துக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த இடஒதுக்கீடு வழக்கினை விசாரித்த அமர்வில் இருந்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் ‘செல்லும் என்று அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல், நீதிபதி ரவீந்திர பட்அதிருப்தி தீர்ப்போடு ஒத்திசைவதாகத் தெரிவித்துள்ள நிலையில், வழக்கமான நடைமுறைப்படி ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.  திமுகவை பொறுத்தவரை இந்த வழக்கில் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தது. ஆனாலும் ‘கேசவானந்த பாரதி’, ‘இந்திரா சாஹ்னி’ (மண்டல் ஆணையத் தீர்ப்பு) உள்ளிட்ட, இந்த அமர்வை விட அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புகளுக்கு எல்லாம் முரணாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது.   

ஆனால், இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் அடிப்படையான சமத்துவக் கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் அமைந்திருக்கிறது. அதனால் தான் ‘இந்தத் தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, முன்னேறிய பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பை மீறுகிறது’ என்று 2 நீதிபதிகள் கொண்ட மைனாரிட்டித் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரபட், தனது தீர்ப்பின் தொடக்கத்திலேயே ‘நம் நாடு குடியரசாகி 70 ஆண்டுகளில் முதல் முறையாக பாரபட்சமுள்ள, விலக்கி வைக்கும் தன்மையுள்ள கொள்கைகளுக்கு இந்த நீதிமன்றம் அனுமதியளிப்பதால், மெஜாரிட்டி (3 நீதிபதிகள்) தீர்ப்புடன் நான் இணைந்து செல்ல மறுப்பதற்கு வருந்துகிறேன்’ என்று குறிப்பிட்டுவிட்டே தனது தீர்ப்பை எழுதியுள்ளார்.

இறுதியில் ‘இந்த அரசியல் சட்டத் திருத்தம் சமூகநீதியை வலுவிழக்கச் செய்து, அதன் மூலம் அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பைத் தகர்க்கும் விதத்தில் உள்ளது’ என்பதைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். ஆகவே நாட்டில் உள்ள 82 %பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூக நீதியைக் காப்பாற்றிட, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலை நாட்டிட, சமூக நீதிக்காகத் தொன்று தொட்டுப் போராடி வரும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


Tags : Supreme Court ,DMK ,general secretary ,Duraimurugan , 10 percent reservation, judgment, petition in Supreme Court, Duraimurugan notification
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...